கரூர் துயரம்: ``காவல்துறையினர் ஏன் எங்களை வரவேற்றனர்?'' - ஆதவ் அர்ஜுனா கேள்வி
Vikatan October 14, 2025 05:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ விசாரிக்க உத்தரவு வழங்கியதுடன், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,

"வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் கூட முழுமையாக வர முடியவில்லை."

விஜய் பிரசாரம் கரூர்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவருடைய சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக உருவானது.

இது முதல் கூட்டம் கிடையாது, திருச்சி, நாமக்கல், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்கு செல்லும்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் உருவாக்கினர்.

ஆனால் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். எந்த மாவட்டத்திலும் காவல்துறை ஆதரவு வழங்கியது இல்லை. அரியலூரில் மட்டும் வழங்கினார்கள். எங்களுக்கு பெரம்பலூர் எஸ். பி பல தகவல்களை வழங்கினார். அதனால் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தோம்.

கரூர் விஜய் பிரசாரம்

நாங்கள் நல்லபடியாக நாமக்கல் பிரச்சார பயணத்தை முடித்துவிட்டு, காவல்துறை சொன்ன 3 முதல் 10 மணி வரை என்ற உரிய நேரத்தில் கரூர் சென்றோம்.

எங்களுடைய நேரலையை எல்லா ஊடகங்களுக்கும் கொடுத்திருக்கிறோம். தலைவர் எங்கிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தலைவர் தாமதமாக வந்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கின்றனர்.

கரூரில் காவல்துறையினர் தான் எங்களை வரவேற்றார்கள். எந்த மாவட்டத்திலும் இப்படி நடக்கவில்லை. அவர்கள்தான் திட்டமிட்ட இடத்தில் நின்று பேசுங்கள் என்று சொன்னார்கள்.

தலைவர் எல்லாமே வசதியாக இருக்கிறதா என கேட்டுவிட்டுத்தான் மேலே எழுந்து பேச ஆரம்பித்தார்.

ஏற்பாட்டில் தவறுகள் இருந்தால் ஏன் காவல்துறை எல்லையிலேயே எங்களை வரவேற்க வேண்டும் என்பது எங்கள் முதல் கேள்வி.

பேசும்போது தலைவர் மக்களைப் பார்த்துத்தான் பேசினார். எங்கே தண்ணீர் கேட்டார்களோ அங்கே அவர் கையாலேயே தண்ணீர் கொடுத்தார்.

ஆம்புலன்சுக்கு அவரே வழிவிட சொன்னார். மக்களைப் பார்த்துவிட்டு, அவரால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டு கிளம்பினார்." எனப் பேசினார்.

(மேலும் விவரங்கள் அப்டேட் செய்யப்படும்)

கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவு
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.