சட்டப்படி, இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
அது விபத்து நேரத்தில் உயிரைக் காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு சாதனம்.
ஆனால், தலைக்கவசம் அணிவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது அல்லது சேதம் ஏற்படுகிறது என பலரும் நினைக்கிறார்கள்.
இறுக்கமாக தலைக்கவசம் அணிவது, உச்சந்தலையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வியர்வை தேங்கி முடியைப் பலவீனப்படுத்தும் என்று சிலர் கூறுகிறார்கள்.
தலைக்கவசத்தில் சேரும் தூசி, அழுக்கு அல்லது பூஞ்சைத் தொற்றுகள் முடியின் வேர்களை பாதிக்கும் என்று மற்ற சிலர் நம்புகிறார்கள்.
அப்படியென்றால், தலைக்கவசம் அணிவது முடி உதிர்வுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் என்ன பதில் அளிக்கிறார்கள் என்பது பற்றிய தெளிவான விளக்கத்தை தெரிந்துகொள்ளலாம்.
1. ஹெல்மெட் அணிவதால் முடி உதிருமா?தலைக்கவசம் அணிவதால் உண்மையில் முடி உதிருமா?
இந்த கேள்வி பலருக்கும் எழலாம்.
ஆனால், 'தலைக்கவசம் அணிவதால் முடி உதிர்கிறது என்ற கருத்துக்கு அறிவியல் ஆதாரம் இல்லை' என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் .
ஆனால், சில சமயங்களில் தலைக்கவசம் அணிவது, தலையில் உராய்வை ஏற்படுத்தலாம்.
அதனால் வியர்வை தேங்கி, உச்சந்தலையையோ அல்லது முடியின் வேர்களுக்கு அருகிலுள்ள தோல் பகுதியையோ பாதிக்க வாய்ப்பு உண்டு.
ஹெல்மெட்டின் உட்புறம் அழுக்காகவோ, மிகவும் இறுக்கமாகவோ அல்லது அதில் பூஞ்சை காளான் வளர்ந்திருந்தாலோ, அது உங்கள் தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.
ஆனால், முடி உதிர்தலுக்குக் தலைக்கவசம் அணிவது மட்டுமே காரணம் அல்ல.
தலைமுடியை சுத்தமாக வைத்துக்கொள்வதும், தலைக்கவசத்தின் உட்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதும் முடி சேதமடைவதைத் தடுக்க உதவும்.
அதேபோல் ஹார்மோன் மாற்றங்கள், மரபியல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும் முடி உதிர்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
2. இளமையில் முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள் என்ன ?இளம் வயதிலேயே முடி உதிர்வதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை சரியாக கண்டறிவது மிக முக்கியம்.
மும்பையில் உள்ள ஜாஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தோல் மற்றும் ட்ரைக்காலஜி துறையின் ஆலோசகர் மருத்துவர் மைதிலி காமத் இதுகுறித்து விளக்கமளித்தார்.
"முடி உதிர்தலுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று ஹார்மோன் மாற்றங்கள். பெண்களுக்கு, தைராய்டு பிரச்னை அல்லது பிசிஓடி போன்ற ஹார்மோன் கோளாறுகள் முடி உதிர்வை ஏற்படுத்தலாம். ஆனால் ஆண்களுக்கு மரபணு (ஜெனெடிக்) காரணிகளே, முடி உதிர்வுக்கான காரணிகளில் பெரும் பங்கு வகிக்கின்றன" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர் மைதிலி காமத், "இதைத் தவிர, சில நோய்கள், வைட்டமின் குறைபாடு, இரும்புச் சத்து குறைபாடு மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவையும் முடி உதிர்வுக்கான முக்கிய காரணிகள்"என்றார்.
3. ஹெல்மெட் அணிவதால் உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படுமா?மும்பையைச் சேர்ந்த தோல் மருத்துவர் டாக்டர் ஷரிஃபா சௌஸ் இக்கேள்விக்குப் பதில் அளித்தார்.
"மிகவும் இறுக்கமாக தலைக்கவசம் அணிவது, முடியின் வேர்களை பலவீனப்படுத்தும். சரியாகப் பொருந்தாத ஹெல்மெட் அணிவதால் உச்சந்தலையில் அரிப்பு, வியர்வை மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படலாம்.
ஹெல்மெட் உங்களுக்குத் பொருத்தமான அளவில் இல்லாவிட்டாலோ, உள்ளே சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டாலோ இந்தப் பிரச்னை மோசமடையக் கூடும்"என்றார்.
மருத்துவர் மைதிலி காமத் இதுகுறித்து கூறுகையில்,
"நீங்கள் போனிடெயில் போன்ற முடி அலங்காரத்தோடு ஹெல்மெட் அணிந்தாலோ அல்லது முடியை வேர்களில் இறுக்கமாக இழுக்கும் வகையில் கட்டியிருந்தாலோ அது உராய்வை ஏற்படுத்தும். ஏனென்றால், ஹெல்மெட் அணிந்திருக்கும் போது முடி தொடர்ந்து இழுக்கப்படுகிறது. ஹெல்மெட் விளிம்புகள் மீதான உராய்வாலும் முடி உடைந்து போகும் அபாயம் உள்ளது"என்று விளக்கினார்.
4. ஹெல்மெட்டின் கீழ் வியர்வை தேங்குவதால் பொடுகு ஏற்படுமா?தலைக்கவசம் அணிவதால் பொடுகுத்தொல்லை ஏற்படும் என்று கூறி, பலரும் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்கிறார்கள்.
ஆனால் மும்பையைச் சேர்ந்த தோல் நிபுணர் மருத்துவர் ஷரிஃபா சௌஸ் இதுகுறித்து விளக்குகிறார்,
"தலைக்கவசம் அணிந்தால் உச்சந்தலையில் வியர்வை தேங்கி, அதில் பூஞ்சை அல்லது பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் பூஞ்சை உச்சந்தலையைத் தொற்றிக் கொண்டு, அரிப்பு மற்றும் பொடுகை ஏற்படுத்தக்கூடும். அதனால், எப்போதும் தலைமுடியை சுத்தமாக வைத்திருக்கவும், காற்றோட்டம் உள்ள ஹெல்மெட்டை அணிவதும் மிக முக்கியம்," எனக் கூறுகிறார்.
மேலும், "தலைக்கவசத்தை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். அதை அடிக்கடி சுத்தம் செய்தால், இத்தகைய பல பிரச்னைகளை எளிதாகத் தவிர்க்கலாம்"என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
5. ஹெல்மெட் அணிபவர்கள் தங்கள் தலைமுடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?"தலைக்கவசம் அணிவது மட்டுமே முடி உதிர்வதற்கு காரணம் அல்ல. தவறான தலைக்கவசத்தைப் பயன்படுத்துவதும் முடி உதிர்வை ஏற்படுத்தும். உராய்வு, அழுத்தம் மற்றும் வியர்வை ஆகியவை முடி உதிர்தலுக்குக் காரணமாகின்றன. சருமத்தை முறையாகப் பராமரித்து, சுரப்பிகள் சேதமடையாமல் இருந்தால், முடி மீண்டும் வளரும். நீண்ட காலமாக முடி உதிர்தல் ஏற்பட்டு வந்தால், அதற்குப் பின்னால் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்க்க மருத்துவரை அணுக வேண்டும்" என்கிறார் மருத்துவர் ஷரிஃபா சௌஸ்.
ஹெல்மெட் அணியாமல் இருப்பது பிரச்னைக்குத் தீர்வாகாது, ஆனால் முடி உதிர்தலைத் தடுப்பது சாத்தியம் தான்.
தலைக்கவசம் அணிவதால் முடி உதிர்வு ஏற்படும் என்பது தவறான கருத்து. அதனைப் பலரும் நம்புகிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக, தலைக்கவசம் அணிவது முடி உதிர்தலுக்கான நேரடி காரணம் அல்ல.
அழுக்கு, வியர்வை, பூஞ்சை மற்றும் உராய்வு ஆகியவை உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும், எனவே ஹெல்மெட்டை சரியாக அணிவது முக்கியம்.
உங்கள் ஹெல்மெட்டை சுத்தமாக வைத்திருப்பது, சரியாக பொருந்தக்கூடிய ஹெல்மெட் அணிவது, உங்கள் தலைமுடியைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பது ஆகியவை முடி உதிர்தலைத் தடுக்க உதவும்.
ஹார்மோன்கள், மரபியல், ஊட்டச்சத்து மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகளால் முடி உதிர்தல் ஏற்படுகிறது.
தலைக்கவசம் அணிவது மட்டுமே அதற்கான காரணம் அல்ல.
எனவே, பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்காக தொடர்ந்து தலைக்கவசம் அணியுங்கள். அதே சமயம், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் கவனிக்க மறக்காதீர்கள்.
உணவுமுறை மாற்றங்கள், மருத்துவ சிகிச்சை, மருந்துகள் அல்லது உடற்பயிற்சி போன்று வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என நீங்கள் சிந்தித்தால், ஒரு மருத்துவரையும் தகுதி வாய்ந்த பயிற்சியாளரையும் அணுகுவது முக்கியம்.
ஒரு மருத்துவரிடம் சென்று, உங்கள் உடல்நிலையையும், அறிகுறிகளையும் முழுமையாக மதிப்பீடு செய்து, அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது நல்லது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு