கரூரில் கூட்டநெரிசலில் பலியானவர்கள் குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்த மக்கள் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக வழக்குகள் நடந்து வரும் நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து இதுகுறித்து பேசிய தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா “கரூரில் விஜய் பேசியது முதல் கூட்டம் அல்ல. காவல்துறை சொன்ன நேரத்தில் அவர் சரியாகதான் சென்றார். எங்களை கரூர் எல்லையிலேயே வரவேற்ற போலீஸார், திட்டமிட்ட ஒரு இடத்தில் எங்களை கொண்டு நிறுத்தினர். மாவட்ட எல்லைக்கு வந்து அவர்கள் ஏன் வரவேற்க வேண்டும்?
தமிழக அரசின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் கட்சியை முடக்க முயற்சிக்கப்பட்டது. தவெகவுக்கு எதிரான ஐகோர்டு வழக்கில் விஜய் குற்றவாளி போல சித்தரிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டை நாடினோம். தற்போது சிபிஐ விசாரணை காரணமாக உண்மையும் நீதியும் கிடைக்கும்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை தத்தெடுப்பது என விஜய் முடிவு செய்துள்ளார். அவர்கள் வாழ்க்கை முழுக்க தவெக உடனிருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K