சிபிஐ விசாரணை: கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு திமுகவுக்கு பின்னடைவா?
BBC Tamil October 15, 2025 05:48 AM
BBC கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்குமென்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இது தவிர, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துவந்தது.

இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

TVK கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடந்தபோது, மிகப் பெரிய நெரிசல் ஏற்பட்டு 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர நிகழ்வு விரைவிலேயே ஒரு அரசியல் புயலாக உருவெடுத்தது.

இந்த மக்கள் சந்திப்பில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த தகவல் வெளியாகிவந்த நிலையிலும் த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் இருந்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் சென்னைக்குச் சென்றதும் பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ஆனால், இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டவுடன் தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் உடனடியாக அங்கே வந்தது எப்படி என த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் கேள்வியெழுப்பினர்.

அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் வெவ்வேறு பரிமாணங்களை எடுத்தது. இந்த நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று த.வெ.கவினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதுசெய்யப்பட்டார்.

வருவாய்த் துறை செயலர் பி. அமுதா தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விவகாரம் நடந்த விதம் குறித்து விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் சாலைகளில் ரோட் ஷோக்களை நடத்துவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பதால், இதுபோன்ற கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டுமென உத்தரவிட்டது.

இதையடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அவர்கள் தலைமறைவாக இருந்தனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சென்றுவிட்டார்.

இதன் காரணமாக, இந்த சம்பவத்தை ஒட்டி விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்றைத் தவிர, த.வெ.க. தரப்பின் சார்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை வலுவாக முன்வைக்க ஆட்களே இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. தரப்பின் கோரிக்கையையும் உள்ளடக்கி வெளியாகியிருக்கும் தீர்ப்பு, அக்கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

CONSTANDINE RAVINDRAN "அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம்" - கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்

ஆனால், இந்த தீர்ப்பினால் எந்தவிதத்திலும் தமிழ்நாடு அரசுக்கோ, தி.மு.கவிற்கோ பின்னடைவு இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்.

"இந்தத் தீர்ப்பை ஒரு அரசியல் பின்னடைவாக பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் துவக்கத்திலிருந்தே இந்த விவகாரத்தை நாங்கள் அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. அப்படி அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம். கட்சியே முடங்கிப்போயிருக்கும்.

மாறாக நாங்கள் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்தே அணுகினோம். 41 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு அந்த அரசியல் கட்சியின் பொறுப்பின்மை காரணமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்தோம்.

ஒரு விசாரணை அமைப்பிடமிருந்து இன்னொரு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்ற வேண்டுமென்றால் அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். காலதாமதம், வழக்கு தடம்புரள்வது, அரசியல் ஆதாயத்திற்காக துணை போவதாக வழக்கு கொண்டுசெல்லப்படுவது போன்ற காரணங்கள் இருந்தால்தான் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்படும்.

ஆனால், இந்த வழக்கில் அப்படிக் காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. மேலும், கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இருக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், எல்லா தமிழ் அதிகாரிகளும் அறம் இல்லாதவர்களா? இதில் எந்த வகையிலும் தி.மு.கவுக்கு பின்னடைவு இல்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

ஆனால், அரசியல் கருத்துருவாக்கத்தில் இந்தத் தீர்ப்பு தி.மு.கவுக்கு ஒரு பின்னடைவாக அமையாதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக இல்லை. இந்த விவகாரத்தின் எந்தத் தருணத்திலும் முதலமைச்சர் துவங்கி, யாருமே இந்த வழக்கை அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. ஒரு தருணத்திலும் தனிப்பட்ட முறையில் விஜய்யையோ, அந்தக் கட்சியையோ விமர்சித்துப் பேசியதில்லை. எங்களைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் நீதி வழங்கும் மன்றங்களாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் மன்றங்களாக இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்கிறார்.

Getty Images ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு என்கிறார் விஜயன்.

மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவசரப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்கிறார். "இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்றோ, விஜய் தரப்பு தவறு செய்துவிட்டது என்றோ சொல்லவரவில்லை. ஆனால், ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு.

விசாரணையில் பாரபட்சமிருந்தால், வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். காரணம், சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலங்களின் வசம் உள்ள ஒரு விவகாரம். ஆகவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது மிக அரிதாகத்தான் நடக்கும். தவிர, சி.பி.ஐயைப் பொறுத்தவரை நிதி மோசடி போன்ற விவகாரங்களில்தான் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

இதுபோன்ற விவகாரங்களில் அவர்களுக்கு போதிய ஆள் பலமும் கிடையாது, பெரிய வெற்றிகளையும் பெற்றது கிடையாது. நான் தாக்கப்பட்ட வழக்கிலேயே சி.பி.ஐயால் வழக்கை நிரூபிக்க முடியவில்லை. ஒரு விசாரணை அமைப்பு விசாரணையைத் துவங்குவதற்கு முன்பே இப்படி வழக்கை மாற்றுவது அவசரமான செயல்பாடு" என்கிறார் கே.எம். விஜயன்.

Vijayan மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

ஆனால், இந்த விவகாரம் தி.மு.கவுக்கு பின்னடைவாக இல்லாவிட்டாலும் சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். "இந்த வழக்கில் பல கேள்விகள் இருக்கின்றன. யாரும் கேட்காமலேயே அருணா ஜெகதீசன் ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சி.பி.ஐ. ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றொரு பக்கம் விசாரணைகளை நடத்தியது. காரணம், சி.பி.ஐயின் நோக்கமும் ஆணையத்தின் நோக்கமும் வெவ்வேறு.

அப்படியிருக்கையில் ஏதற்காக இந்த உத்தரவு எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படலாம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென செந்தில் பாலாஜியை அழைக்கலாம். தவிர, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சதியால்தான் நெரிசல் நடந்தது என ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு உதவும்" என்கிறார் ப்ரியன்.

TVK எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார் தவெக கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை இதில் அரசியல் ரீதியாக இதில் எதையும் சொல்லவிரும்பவில்லை. வழக்கின் தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இதில் எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார்.

"கரூர் சம்பவத்தில் நிறைய மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு நீதி விசாரணை வேண்டுமெனக் கேட்டோம். வேறு சிலர் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமெனக் கேட்டார்கள்.

உச்ச நீதிமன்றம் இரு கோரிக்கைகளையும் இணைத்து ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தால் எங்களுக்கு அரசியல் ரீதியாக சாதகம் ஏற்பட்டிருக்கிறதா என்பதெல்லாம் நாங்கள் பேச விரும்பவில்லை. இதை வைத்து எந்த அரசியல் ஆதாயமும் நாங்கள் தேட விரும்பவில்லை" என்கிறார் அவர்.

ஆனால், தமிழ்நாடு அரசும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவைத்தானே அமைத்தது, அதனை எதிர்த்தது என்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண் ராஜ், "அரசியல் கூட்டங்களை நடத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த நெரிசல் விவகாரம் தொடர்பாக வருவாய்த் துறைச் செயலர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்த பிறகு, பணியில் உள்ள ஒரு அதிகாரி அதனைத் தாண்டிச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. அதனால்தான் அந்த விசாரணைக் குழுவை ஏற்க முடியவில்லை" என்கிறார் அருண்ராஜ்.

Getty Images உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பா.ஜ.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றுள்ளன. ஆனால், நாம் தமிழர் கட்சி இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. "சிபிஐ விசாரணை என்பது ஏற்புடையதல்ல. அது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு காவல் துறை விசாரணையில் என்ன குறை இருக்கிறது?" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.