தமிழகத்திலிருந்து வந்த மின்னஞ்சல் கலக்கம்: கர்நாடக முதல் மந்திரி வீடு வரை வெடிகுண்டு மிரட்டல் பரவல்!
Seithipunal Tamil October 15, 2025 10:48 AM

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக பரவி, காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறி வருகின்றன. மத வழிபாட்டு தலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வரை பலரின் வீடுகளுக்கும் மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனால் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கையில் உள்ளன.இதேபோல், அண்மையில்  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 11ம் தேதி, சென்னையில் உள்ள தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், இரு தலைவர்களின் இல்லங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மின்னஞ்சல் கிடைத்த உடனே, தமிழக காவலர்கள் அவசர தகவலை கர்நாடக காவலர்களிடம் பகிர்ந்தனர். இதையடுத்து, கர்நாடக பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையின் பிறகு, அது பொய்மிரட்டல் (Hoax) என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். முதற்கட்ட தகவல்களில், மின்னஞ்சல் அனுப்பியவர் தமிழகத்தைச் சேர்ந்த நபர் என வெளிவந்துள்ளது. தற்போது, மின்னஞ்சல் முகவரி மற்றும் டிஜிட்டல் அடையாளம் வழியாக அந்த நபரை கண்டுபிடிக்க சைபர் பிரிவு  காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம், தமிழகத்தில் பரவி வரும் வெடிகுண்டு மிரட்டல்களின் தொடரில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.