டாஸ்மாக்: `என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிபிஐ கூட.!' ED-க்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
Vikatan October 15, 2025 10:48 AM

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தமிழக அரசு சார்பாக வாதங்களை முன்வைத்து வருகிறார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

டாஸ்மாக் கடை

``எந்த ஒரு வழிமுறையையும் பின்பற்றாமல் அமலாக்கத் துறையினர் அரசின் முக்கிய அலுவலகத்தில் சோதனை நடத்தி கணிப்பொறிகள் லேப்டாப்புகள் முக்கியமான தரவுகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம்” என தமிழக அரசு குற்றம்சாட்டியது.

``டாஸ்மாக் விவகாரங்களில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதனால் தான் பண மோசடி கோணத்தில் நாங்கள் விசாரணையை தொடங்கினோம். எங்கள் விசாரணையில் ஒரு பகுதிதான் நடத்தப்பட்ட சோதனை” என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது

``டாஸ்மாக் அரசு நிறுவனத்தில் அதிகாரி யாரேனும் தவறு செய்திருந்தால் அமலாக்கத்துறை தனிப்பட்ட முறையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் சார்ந்த இடத்தில் சோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஒரு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் எப்படி இவர்கள் அத்துமீறி இப்படி சோதனையை செய்து கோப்புகளை பறிமுதல் செய்ய முடியும்? இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.

``வழக்கு பதிவு செய்தாலே எந்த அரசு நிறுவனத்தில் வேண்டுமானாலும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ய முடியும் என்று அதிகாரம் வரம்பு மீறப்பட்டிருக்கிறது. சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பாக அது சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட அரசிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் ஆனால் அமலாக்கத்துறை அடாவடி உடன் நடந்து கொள்கிறார்கள்” என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

உச்ச நீதிமன்றம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

``உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

``இரவு ஒரு மணி வரை பெண்களை கூட வெளியே செல்ல அனுமதிக்காமல் அமலாக்கத் துறையினர் அடாவடி செய்து இருக்கிறார்கள்.

தனிப்பட்ட நபர்களிடம் அவர்களது அலைபேசிகளை வாங்கி அதை திறக்கச் சொல்லி அதில் இருக்கக்கூடிய அத்தனை தரவுகளையும் இவர்களிடம் இருக்கக்கூடிய நவீன உபகரணங்களில் மாற்றிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் அமலாக்கத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?” என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

``டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசே கூட வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது” என அமலாக்கத்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

``டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்தீர்கள்?” என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

``38 வழக்குகளை முறையாக விசாரிக்காமல் தமிழ்நாடு அரசு மூடி இருக்கிறது. மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி நடந்திருக்கிறது. அதனால் தான் நாங்கள் இதில் தலையிட்டோம்” என அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை

``ஆறு ஆண்டுகளாக அமலாக்கத்துறை ஈடுபட்டிருக்கும் வழக்கின் விசாரணைகளை நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதில் தெரிவித்தார்.

``டாஸ்மாக் அலுவலகத்தின் மண்டல ரீதியிலான அதிகாரிகள் ஏராளமான அளவில் லஞ்சம் பெற்று பணியாளர்களை நியமிப்பது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பியை விட அதிக கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். மேலும் அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களையும் கூட டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் விற்கிறார்கள். இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது. இவை அனைத்தும் மேல் மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து பகிர்ந்து அளிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது .இது தினம் தோறும் நடக்கும் நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும் பதில் குற்றச்சாட்டுகளை அடுக்கியது.

வீட்டிற்கு கூட செல்ல விடாமல் அதிகாரிகளை துன்புறுத்தியதாகவும் இரவில் கூட பெண்களை விசாரித்து துன்புறுத்தியதாக தமிழக அரசு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமலாக்கத் துறையினர் மறுப்பு தெரிவித்தது.

``விசாரணை முடிந்ததற்கு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் பெண் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அவரவர் வீட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்” என அமலாக்கத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

``எந்தெந்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றதோ அவர்களுடைய கணிப்பொறி மற்றும் அலைபேசிகள் மட்டும் தான் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து அதிகாரிகளுடையதும் செய்யப்படவில்லை” என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் வாதம் முன்வைத்தனர்.

மேலும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தனது வாதங்களை வைக்க வேண்டி இருப்பதாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க, வழக்கு விசாரணை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.