திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கரவை தொழில் செய்து வருகிறார். விருவீடு அருகே கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவர் மகள் ஆர்த்தி என்பவர் உடன் காதல் மலர்ந்திருக்கிறது. கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் மீது சந்திரன் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். மாதங்கள் கடந்ததால் பிரச்சனை இன்றி காதல் தம்பதிகள் சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வழிமறித்த சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை அறிவாளால் சரிமாரியாக வெட்டியுள்ளார். இதில் கை துண்டான நிலையில் படு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பாலத்திலேயே சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்வடத்திற்கு வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா ஆகியோர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மருமகனை படுகொலை செய்த மாமனார் சந்திரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
கொலை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காதல் திருமண தகராறில் ஐந்து மாதங்கள் காத்திருந்து நடத்தப்பட்ட படுகொலை தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.