உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறவும், பணியாற்றவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதனால், டெட் தேர்ச்சி பெறாத ஆரம்பக் கல்வித் துறை ஆசிரியர்களுக்காக தமிழக அரசு ஒரு சிறப்பு வாய்ப்பை அறிவித்துள்ளது.
இவர்களுக்காக, அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் மூன்று சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்.
தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு, வார இறுதி நாட்களில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பணியிடைப் பயிற்சி அளிக்கப்படும். இந்தச் சிறப்பு ஏற்பாடு, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, அவர்கள் சட்டப்படி தகுதி சான்றிதழைப் பெறவும் வழிவகை செய்கிறது.
Edited by Mahendran