இந்தியாவில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழை எனவும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை எனவும் பதிவு செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்தாலும், தமிழகத்திற்கு பிரதானமான மழை வடகிழக்கு பருவமழையே ஆகும்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (புதன்கிழமை) தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை இன்று முதல் முழுமையாக விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வருகிற 18ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55 கி.மீ. வரை வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.