மதுரையில் துப்பாக்கி சுடுதல் வீரரான 10ம் வகுப்பு மாணவன் யுவன் என்பவர், AIR GUN-ஆல் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருத்திகா. இவரது மகன் பெயர் யுவன்.துப்பாக்கி சுடும் வீரராக யுவன் இருந்தார். பல்வேறு போட்டிகளில் அவர் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தான் இன்று அவர் திடீரென்று ‛ஏர்கன்' துப்பாக்கியை பயன்படுத்தி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மதுரை மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். யுவனின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யுவன் தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.