சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி; மனைவி மூலம் ரூ.300 கோடி சம்பாதித்த மும்பை மாநகராட்சி கமிஷனர்
Vikatan October 16, 2025 01:48 AM

மும்பை அருகில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியில் கமிஷனராக இருந்தவர் அனில் பவார். தனது மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி கமிஷனர் அனில் பவார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரும், அவருக்கு துணையாக இருந்த மாநகராட்சி திட்ட இணை இயக்குனர் ஒய்.எஸ்.ரெட்டியும் இதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அனில் பவார் மற்றும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான ரூ.71 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 41 கட்டிடங்களுக்கு சட்டவிரோதமாக அனில் பவார் அனுமதி கொடுத்துள்ளார். இதில் 129 கட்டிடங்கள் கடற்கரையோரம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகம் இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பில்டர்களுக்கு சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது அவர்களிடமிருந்து லஞ்சப்பணத்தை வாங்க அப்பில்டர்களின் கம்பெனியில் தனது மனைவி பாரதி அனில் பவாரை பங்குதாரராக சேர்த்துவிட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் அனில் பவார் தம்பதி, ரெட்டி உட்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் ரூ.300 கோடி அளவுக்கு அனில் பவார் தனது மனைவி மற்றும் மகள், உறவினர்கள் பெயரில் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்து இருக்கிறார். இதில் அவரது மனைவியை பில்டர்களின் கம்பெனியில் பங்குதாரராக சேர்த்துவிட்டு அங்கிருந்து வரும் பணத்தை சட்டப்பூர்வமான மாற்றி இருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர அனில் பவார் தனது குடும்பத்திற்கு சொந்தமான கம்பெனிகள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி இருக்கிறார். அனில் பவாரின் உறவினர் ஜனார்த்தன் பவார்தான் பில்டர்களிடமிருந்து லஞ்சப்பணத்தை வாங்குவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனார்த்தனின் நாசிக் இல்லத்தில் இருந்து ரூ.1.32 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பில்டர்களுக்கு கட்டிடங்கள் கட்ட சதுர அடிக்கு இவ்வளவு லஞ்சம் என்று கணக்கிட்டு அனில் பவார் வாங்கி இருக்கிறார். இந்த லஞ்சப்பணத்தை அனில் பவாரின் மனைவி பாரதியும், அவரது ஜனார்த்தனும்தான் முக்கிய பங்கு வகித்து வந்தனர் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனில் பவாருக்கு சொந்தமான ரூ.71 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கி இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.