உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்காகத் திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் அரங்கேறும் உங்களுடன் ஸ்டாலின் நாடகம்! உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்காகத் திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் இதே நாடக முகாமிற்காகத் திருச்சி அரசுப்பள்ளிக்கு விடுமுறை அளித்த நிலையில், தொடர்ந்து அரசுப்பள்ளி வகுப்பறைகளைத் திமுக அரசு பறிப்பது தொடர்கதையாகி வருகிறது.
ஒருபுறம் "ஒரு நாளில் பாடம் ஒன்றும் நடக்கப்போவதில்லை" என்று மூத்த அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் கூறுகிறார். மறுபுறம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அனுமதி வாங்கி விடுமுறை அளிக்கப்பட்டதாய் தாமலேரி முத்தூர் பள்ளித் தலைமையாசிரியர் கூறுகிறார். ஆக மொத்தத்தில், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியில் திமுக அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று கோடி கோடியாக மக்கள் வரிப்பணத்தைச் செலவழித்து நாடக விழா நடத்தும்போது, சில ஆயிரம் செலவில் ஒரு கொட்டகை அமைத்து மாணவர்களின் கல்வியைச் சீரழிய விடாமல் தமது பெயரில் நடக்கும் முகாமை நடத்த முடியாதா முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.