15,000 கோடி முதலீடு... எங்கே?- Foxconn விவகாரத்தில் திமுக அரசை அம்பலப்படுத்தும் அ.தி.மு.க.
Seithipunal Tamil October 16, 2025 06:48 AM

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள கூர்மையான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,"முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் Foxconn நிறுவன அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய முதலீடு வரவுள்ளதாக பெருமையுடன் அறிவித்தார்.

இதனை “செயலில் ஸ்டாலின் மாடல்” என்று திமுக அரசு மார்தட்டியது.ஆனால், அதே Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு தொடர்பான எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனத் திடீரென விளக்கம் அளித்துள்ளது. இதனால், “பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள்” என்ற ஸ்டாலின் அவர்களது புகழ்பெற்ற வாக்கியம், தற்போது அவருக்கே நினைவூட்டப்படும் நிலை உருவாகியுள்ளது என அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது,"முதல்வர் ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா சென்று வருகிறார். ஆனால் அந்த சுற்றுப்பயணங்களால் தமிழகத்திற்கு கிடைத்தது என்ன?  ஒரு வெற்று பேப்பர்! சட்டியில் இல்லாதது அகப்பையில் எப்படிச் சேர்ந்துவிடும்? நேற்று அம்பலமான Foxconn பொய், இந்த திமுக அரசின் பல பொய்களில் இன்னொன்று மட்டுமே. இந்த ‘பொய் ஆட்சி’ விரைவில் சிதைந்து விழப் போவதற்கான முன்சிக்னல் இதுவே.

இதே சமயம், கூகுள் நிறுவனம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை அறிவித்துள்ளது. திறமையற்ற, பொம்மை முதல்வரின் கையில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, வளர்ச்சியின் பாதையில் மீண்டும் நகர்த்தும் ஒரே வழி, 2026ல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதே!” என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.