ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட பேருந்தில் 57 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது பேருந்திலிருந்து புகை வர ஆரம்பித்திருக்கிறது.
ஓட்டுநர் சுதாரித்து ஓரம் கட்டியபோது சில வினாடிகளில் மொத்த பேருந்தும் பற்றி எரியும் அளவுக்கு நெருப்பு பரவியிருக்கிறது.
சாலையில் சென்றவர்களும் உள்ளூர்வாசிகளும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்ததுடன், மீட்புப் பணிகளிலும் உதவியிருக்கின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்து 5 நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அக்டோபர் 14ஆம் தேதியே ராஜஸ்தான் முதலமைச்சர் ஜெய்சல்மார் விரைந்துள்ளார். அதிகாரிகள் சேதமடைந்த பேருந்தை பார்வையிட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டவுடன் வந்த 3 ஆம்புலன்ஸ்களில் ஜெய்சல்மாரில் இருக்கும் ஜவஹர் மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிலர் ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். 4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 15 பயணிகள் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். சிலருக்கு 70 விழுக்காடுக்கும் அதிகமாக காயம் ஏற்பட்டிருக்கிறது.
மீட்புப்பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவை அமைத்து 8 ஆம்புலன்ஸ்கள் போய்வர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் தெரியாத அளவு எரிந்து சிதைந்துள்ளனர். டி.என்.ஏ மற்றும் தடயவியல் வல்லுநர்கள் அடையாளம் காணும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். அகமதாபாத் விமான விபத்தைப் போலவே டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ.50,000-உம் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
UP: 10 குழந்தைகளை பலி கொண்ட தீ விபத்து... ஜன்னலை உடைத்து காப்பாற்றிய இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!