திமுகவை சேர்ந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக இன்று காலை சிறப்புக் கூட்டம் நடந்தது. மேயர் இருக்கை அகற்றப்பட்டு, ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியதும், அதிமுக எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா எழுந்து, சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே மேயரின் ராஜினாமா என்றார்.
இதற்கு பதிலளித்த திமுக கவுன்சிலர்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திலும், சொத்து வரி முறைகேடுகளிலும் அதிமுக ஆட்சியிலேயே குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சாட்டி, இரு தரப்பும் கூச்சலிட்டதால் குழப்பம் நிலவியது.
நிலைமையைக் கட்டுப்படுத்த ஆணையர் சித்ரா தலையிட்டு, உடனடியாக தீர்மானம் வாசிக்கப்படுவதாக அறிவித்தார். மேயர் இந்திராணி 'குடும்பச் சூழல்' காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக செயலாளர் தீர்மானத்தை வாசித்தார்.
இந்த கூட்டம் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் முடிந்தது. மேலும் புதிய மேயர் நியமிக்கப்படும் வரை, துணை மேயரே மேயரின் பணிகளை மேற்கொள்வார் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Edited by Mahendran