கூகுள் நிறுவனம் ஆந்திராவிற்குச் சென்றதற்கு காரணம் அதானி..? டி.ஆர்.பி.ராஜா பதில்..!
Seithipunal Tamil October 18, 2025 02:48 AM

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது. இன்று தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் துணை மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, ''தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்பிச்சை உயர்பொறுப்பில் இருக்கும் கூகுள் நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றிருப்பதாகவும், அந்நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சிக்காதது ஏன்'' எனவும் கேள்வி எழுப்பினார். 

அத்துடன், பாக்ஸ்கான் நிறுவனத்துடன் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அதனை அந்நிறுவனம் மறுத்திருப்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கூகுள் நிறுவனம் ஆந்திராவிற்குச் சென்றதன் பின்னணியில் அதானியின் தலையீடு இருப்பதாகவும், பக்கத்து மாநில முதலீட்டைக் குறைசொல்ல விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு நூறு சதவிகிதம் உண்மையானது என்பதோடு உறுதியானதும் எனவும் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், பாக்ஸ்கான் பல நிறுவனங்களை வைத்திருக்கும் நிலையில், அதில் ஒரு நிறுவனத்திடம் கேட்டு செய்தி வெளியிட்டிருப்பதாகவும், பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மற்றும் அதன்மூலம் 14 பேருக்கு வேலைவாய்ப்புகள் நிச்சயம் உருவாகும் எனவும் உறுதியளித்துள்ளார்.

பேரவையில் இல்லாதவர்கள் சிலரும் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து தவறாகப் பேசுவதாகவும், இந்தியா - அமெரிக்கா இடையிலான பிரச்னையின் போதும் கூட தமிழகம் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும் டி.ஆர்.பி.ராஜா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.