புதுதில்லி ஹச்ரத் நிசாமுதீனிலிருந்து மத்தியபிரதேசம் குவாலியர் நோக்கி செல்லும் வண்டே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று அதிகாலை ரயில் புறப்படும் முன் ஐஆர்சிடிசி பணியாளர்கள் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காலை 5.45 மணியளவில் நடந்த இந்த சம்பவம் நிசாமுதீன் ரயில் நிலைய தளத்தில் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், சில பணியாளர்கள் தங்களுக்குள் கடுமையாக சண்டையிடுவதும், பெல்ட்டுகளால் ஒருவரை ஒருவர் அடிப்பதும், ரயில் நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியை தூக்கி ஒருவரை ஒருவர் மீது எறிவதும் காணப்படுகிறது. ஒரு பணியாளர் மற்றொருவரை குப்பைத் தொட்டியால் தாக்கும் காட்சியும் பரவலாக பகிரப்படுகிறது.
இச்சம்பவத்தின் வீடியோ வெறும் இரண்டு மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், “இப்படி நடந்தது எப்படி முடிந்தது?” என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர், “இத்தகைய நடத்தை ரயில்வே சேவையின் கண்ணியத்தை கெடுக்கும்” என கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுவரை ஐஆர்சிடிசி அல்லது இந்திய ரயில்வே சார்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.