மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் திருநங்கை சமூகத்தை சேர்ந்த சுமார் 25 பேர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்படி, அனைவரும் ஒரே சமயத்தில் பினாயில் குடித்ததன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்குள்ள ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் வசந்த் குமார் நிங்வால் தெரிவித்ததாவது, “திருநங்கை சமூகத்தை சேர்ந்த சுமார் 25 பேர் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பினாயில் குடித்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் அனைவரின் உடல்நிலை மெல்ல மெல்ல சீராகி வருகிறது,” என கூறினார்.
இதேபோல், இந்த சம்பவம் குறித்துத் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா தெரிவித்ததாவது, “இந்த சம்பவம், திருநங்கை சமூகத்தை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கிடையேயான தகராறால் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எந்த பொருளை உட்கொண்டார்கள் என்பது குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது,” என தெரிவித்தார். இந்த சம்பவம் இந்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.