‘அதுல ஒண்ணும் இல்ல. கீழ போட்ரு’ என்கிற காமெடிக் காட்சிதான் இந்த எபிஸோட். மாஸ்க் டாஸ்க் என்பதே ஒரு கொடுமையான இழுவை என்னும்போது அதை வைத்தே விசாரணை நாளை ஓட்டியது இன்னொரு கொடுமை.
முந்தைய சீசன்களில் கமல் வரும் வாரஇறுதி எபிசோடுகளை மட்டும் பார்க்கும் ஒரு கூட்டம் இருந்தது. இப்போது அதுவும் போய்விடும் போலிருக்கிறது.
‘ஆடுங்கன்னு உள்ளே அனுப்பிச்சா.. பலர் சிலர் பின்னாடி ஒளிஞ்சிட்டிருக்காங்க. வாங்க விசாரிப்போம்’ என்ற விசே ‘வெள்ளிக்கிழமை’ நிகழ்வுகளைக் காட்டினார். பிரவீன் இரண்டாவது கத்தியை சபரி கட் அவுட் மீது குத்தினார். அடுத்த கத்திதான் தலைவரை தீர்மானிக்கும் என்பதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தன்னைத் தலைவர் ஆக விடாமல் கத்தியால் குத்திய சுபிக்ஷா, ரம்யா ஆகியோர் மீது கொலைவெறியில் இருக்கிறார் கம்ருதீன். “இந்த மாதிரில்லாம் டர்ட்டி கேம் ஆடக்கூடாது. உனக்கெல்லாம் என் கூட சண்டை போட தகுதியே கிடையாது” என்று எரிந்து விழுந்தார். ‘என் தந்தையின் கோபம்தான் எங்கள் குடும்பத்தை மிகவும் பாதித்தது’ என்று கதை நேரத்தில் சொன்ன கம்ருதீன், தானும் அதே கோபத்தை பின்பற்றுவது முரண்.
கெமியிடம் சமாதானம்சபரி எப்படியும் ஜெயிக்கக்கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தில் இருக்கிற பாரு, ‘கனி தலைவர் ஆகட்டும். சபரியைக் குத்துங்க’ என்று தூண்டி விட்டுக் கொண்டிருந்தார். அது போலவே ஆயிற்று. வினோத் மூன்றாவது கத்தியை சபரியின் கட்அவுட் மீது குத்த, கனி வீட்டின் தலைவர். அவரது ஆட்சியில் வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
தன் கையில் காயம் ஏற்படுத்திய கெமி மீது பல நாட்களாக புகார் சொல்லிக் கொண்டிருந்த பாருவிற்கு திடீரென ஞானோதயம் வந்து விட்டது போல. எதிரிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார் போல. எனவே கெமியிடம் சமாதானம் பேசச் சென்றார்.
“ஆக்சுவலி எனக்கு யார் தொட்டாலும் பிடிக்காது. அந்த அளவிற்கு நிறைய கசப்பான சம்பவங்களை கடந்து வந்திருக்கேன்.” என்று பாரு சொல்ல “எனக்கும் நடந்திருக்கு. ஆனா ஆட்டம்ன்னு வந்தா நான் வெறியாயிடுவேன்” என்று கெமி சொல்ல, அவர்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டது போலவே பரஸ்பரம் நடித்துக் கொண்டார்கள்.
“திவாகரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கங்க” - விசே சர்காஸம்விசே என்ட்ரி. வினோத் இட்டுக்கட்டி பாடிய பாடலை ரசித்த விசே, “பிக் பாஸ் அற்புதமான மேடை. ஆனா அதை சரியா பயன்படுத்திக்கறீங்களா? திவாகரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கங்க.. தினமும் ரீல்ஸா போட்டு கொல்றாரு” என்று சொல்ல பெருமிதத்துடன் சிரித்தார் நடிப்பு அரக்கன்.
‘பிச்சை எடுத்து சாப்பிடணுமா?’ என்று முன்பு கண்கலங்கிய விக்ரமை, இப்போது எழுப்பிய விசே ‘ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க. ஓகே’ என்று ஆறுதல் சொன்னார். இதென்ன பிரமாதம், இதை விட ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்பது போல பிக் பாஸில் இதை விடவும் கொடுமையான சம்பவங்கள் எல்லாம் நடக்கும் என்பதே அதற்குப் பொருள்.
அடுத்ததாக கம்ருதீனை எழுப்பிய விசே “என்னப்பா.. ஆச்சு.. எப்பவும் கத்திட்டே இருக்கே?” என்பது போல் விசாரித்தார். “கத்தி டாஸ்க் நேர்மையா நடக்கலைய்யா.. நான் யூரின் போயிட்டு வர்றதுக்குள்ள, என்னை பாரின் அனுப்பற வேலையை பார்த்துட்டாங்க. ஒரு டாஸ்க் நடக்கும்போதே இன்னொரு டாஸ்க்கை பிக் பாஸ் ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு ஃபோகஸ் போயிடுச்சு” என்று கம்ரூதீன் அனத்த ஆரம்பிக்க “ஓ.. பிக் பாஸ் மேலயே புகாரா.. அப்ப உங்க வசதிக்கு நீங்களே விதிகளை எழுதிக்கறீங்களா. இனிமே அப்படி பண்ணிடலாமா?” என்று விசே காட்டமாக சர்காஸம் செய்ய முகம் இருண்டு போனார் கம்ருதீன்.
“அந்த ரூல் புக்கை எடுத்துட்டு வாங்க. படிங்க.. என்ன போட்ருக்கு.. போட்டியில் இருப்பவர் கவனிக்காத சமயத்தில் கத்தியால் குத்தலாம்..ன்னுதானே.. ‘நான் பாத்ரூம் போறேன். யார் வேணா குத்திக்கங்க..ன்னு நீங்கதான் சொல்லிட்டுப் போறீங்க. அப்படி குத்தினா.. Unfair play-ன்னு கூப்பாடு போடறீங்க.. என்னா மேன் இது?” என்று விசே கேட்க ‘இவரிடம் வாக்குவாதம் செய்தால். ‘உக்காருங்க’ன்னுதான் சொல்லப் போறாரு. எதுக்கு வம்பு?” என்று நினைத்து விட்டாரோ, என்னமோ, ‘ஸாரி சார்’ என்று பம்மி விட்டார் கம்ருதீன்.
விசே பிரேக்கில் சென்றவுடன் “யோவ்.. அவருக்குப் புரியும்படி சுருக்கமா தெளிவா சொல்லு.. ஏன் மென்னு முழுங்கற..” என்று வினோத்தும் பார்வதியும் கம்ருதீனுக்கு அட்வைஸ் செய்தார்கள். ‘உங்களையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியலையே’ என்கிற மாதிரி ரியாக்ட் செய்தார் கம்மு.
விசே மேடைக்கு திரும்பிய போது “போட்டியாளர் பண்ற சில விஷயங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு செமயா கோபம் வருது. அதுபோல உங்களுக்கும் வருமா?” என்று பார்வையாளர்களில் ஒருவர் கேள்வி கேட்க ‘வரும்’ என்று ஆரம்பித்த விசே, பின்பு சமாளித்து “அவங்களை எப்படி சரியா வழிநடத்துலாம்ன்னுதான் எங்க டீம் யோசிக்கும். தனிப்பட்ட வகையில் கோபப்பட என்ன இருக்கு?” என்று விளக்கம் தந்தார்.
வீட்டிற்குள் சென்ற விசே “மாஸ்க் டாஸ்க்ல பிக் பாஸ் வீடு ஜெயிச்சது. வாழ்த்துகள். சாப்பாடு எப்படியிருந்தது?” என்று விசாரிக்க, அதுவொரு அபாயகரமான வலை என்பதை உணராத மக்கள் ‘கிரில் சிக்கன் சூப்பர்.. மட்டன் சுக்கா எக்ஸலண்ட்’ என்று மெனு கார்டை ஒப்பித்து நாக்கை சப்புக் கொட்டினார்கள். ‘சூப்பர் டீலக்ஸ் மாதிரி இது சும்மா கிடைச்சதில்லை. நாங்க ஜெயிச்சு சம்பாதிச்சது’ என்று கனி சொன்ன பாயின்ட் அருமை.
“ஓகே.. இந்த டாஸ்க்கை எப்படி ஆட பிளான் பண்ணீங்க.. டீமா ஆடினீங்களா.. என்ன விஷயம்?” என்று விசே விசாரணையைத் தொடங்க “நல்ல சோறு போடறதா பிக் பாஸ் சொன்னாரு. அதனால வெறி கொண்டு ஆடினோம்’ என்று வாயை விட்டார் எஃப்ஜே. “ஆனா இது நாமினேஷன் ஃப்ரீ பாஸ்-க்காக நடந்த டாஸ்க்தானே.? அது உங்களுக்கு முக்கியமாப் படலையா?” என்று விசே கேட்டவுடன் ‘அடடா.. வாயை விட்டு மாட்டிக்கிட்டமே’ன்னு பலருக்கும் தோன்றியிருக்கும்.
“இந்த டாஸ்க்கை என்ன ஸ்ட்ராட்டஜில ஆடினீங்க..?” என்று விசே கேட்க, பிக் பாஸ் வீட்டின் மாஸ்டர் மைண்ட்களாக சபரியும் கனியும் இருந்திருப்பது தெரிய வந்தது. “அப்படின்னா சிலர் விட்டுக்கொடுத்து மத்தவங்களை முன்னே அனுப்பிச்சிருக்கீங்களா.. உங்களுக்கு நாமினேஷன் பாஸ் வேணாமா?” என்று விசே “நாமினேஷனை ஃபேஸ் பண்ண ரெடியா இருக்கேன்” என்றார் விக்ரம்.
இப்படியே இந்த உரையாடல் கசகசவென்று இழுத்துக்கொண்டே போனது. “நாம இப்ப என்ன பேசினோம்னு புரியுதா.. யார்கிட்ட இருந்தும் தெளிவான பதில் வரலை. சொத.. சொதன்னு இருக்கு. நமக்கே இப்படி இருந்தா ஆடியன்ஸூக்கு எப்படி இருக்கும்.. ஏதாவது சுவாரசியமா இருக்குமா?” என்று விசே சொல்ல “யப்பா.. சாமி.. கரெக்ட்டா எங்க மைண்ட் வாய்ஸை பிடிச்சிட்டீங்க.. முடியல” என்று நமக்குத்தான் அலறத் தோன்றியது.
பலவீனமான போட்டியாளர்களை முதலில் பலி கொடுத்துவிட்டு பிறகு வலிமையான போட்டியாளர்களை முன்னே நகர்த்திச்செல்லும் வகையில் பிக் பாஸ் வீடு போட்ட திட்டத்தை “ஏன்.. மத்தவங்களுக்கு நாமினேஷன் பாஸ் வேணாமா... நீங்களா ஏன் நான் வீக்குன்னு ஒத்துக்கறீங்க?” என்றெல்லாம் வறுத்தெடுத்தார் விசே.
என்னதான் டீம் ஆட்டமாக இருந்தாலும் அதிலும் ஒவ்வொரு போட்டியாளரின் அதிகபட்ச அக்கறை இருக்க வேண்டும், கூட்டத்தில் கோவிந்தா போட்டு விட்டு ஓரமாக அமர்ந்து விடக்கூடாது என்பதுதான் விசே சுற்றிச் சுற்றி சொல்ல வந்த கருத்து. தியாகம், அன்பு என்கிற பிசினஸ் எல்லாம் பிக் பாஸிற்கு ஆகாது. ‘செய்..அல்லது செத்து மடி’ என்பதே அவரது தாரக மந்திரம். அப்போதுதான் ஷோ பரபரப்பாக இருக்கும்.
“ஏம்ப்பா கம்மு.. என்னமோ நீயா கஷ்டப்பட்டு இந்த டாஸ்க்ல ஜெயிச்சதா பீத்திக்கிட்டே. அப்படில்லாம் இல்ல. மத்தவங்க விட்டுக் கொடுத்ததால கிடைச்ச வெற்றி இது” என்று வழக்கம் போல் கம்ருதீன் தலையில் குட்டி விட்டு ‘அக்கா ஜெயிக்கணும்.. அண்ணன் ஜெயிக்கணும்.. நீ அழகா இருக்கே.. அதனால ஜெயிக்கணும்.. இதையெல்லாம் விட்டுடுங்க.. ஒரு ஆட்டத்தை வெளில நின்னு வேடிக்கை பார்க்காம.. களத்துல இறங்கி விளையாடுங்க. உங்களுக்கு கிடைச்ச ஸ்பேஸை வேல்யூ பண்ணுங்க” என்கிற உபதேசத்துடன் இந்தப் பகுதியை விசே முடித்த போது ‘ஹப்பாடா..’ என்றிருந்தது. அத்தனை இழுவை.
பிரேக் முடிந்து வந்த விசே, வில்லங்கமான கேள்வியை முன்வைத்தார். அதன் மூலமாவது ஏதாவது பற்றிக் கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு. “இரண்டு வாரம் இருந்துட்டீங்க.. ஒருத்தரைப் பத்தி ஒருவருக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். இந்த வீட்டில் இரு முகம் கொண்ட நபர் யார். வரிசையா சொல்லுங்க.. முதல்ல பாரு.. என்ன போடு போடப் போறாங்கன்னு பாருங்க” என்று பாருவிற்கு முதல் சான்ஸ் கொடுத்தார்.
பொழுது பூராவும் புறணி பேசும் பாருவிற்கு அஃபிசியல் சான்ஸ் கிடைத்தால் விடுவாரா? உற்சாகமாக எழுந்து கனியின் பெயரைச் சொல்லி “ஒரு தாயாக இருந்தாலும் அவரிடமும் ஒரு பேய் இருக்கிறது. Very cunning” என்றார். அடுத்து எழுந்த சுபிக்ஷா, சபரியின் பெயரைச் சொன்னார். அடுத்து வந்தவர்கள் பெரும்பாலும் பாருவின் பெயரைச் சொன்னதும் அவரிடமிருந்து வழக்கம் போல் விதம் விதமான முக சேஷ்டைகள் வெளியே வந்தன.
“ரேம்ப் வாக்ல திவாகர் கூட ஜோடியா போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க. Presentable couple தெரியாதுன்ற மாதிரி காரணம் சொன்னாங்க” என்று விக்ரம் போட்டுக் கொடுக்க தலையில் கை வைத்துக்கொண்டார் பாரு. பொறுமையாக இருப்பதுபோல் நடிக்கும் சபரிக்கு நிறைய கோபம் வரும் என்று அவருக்கும் வாக்குகள் விழுந்தன. இறுதியில் அதிகபட்ச எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று ‘இருமுகன்’ விருதை வென்றார் சபரி.
விசேவிற்கே போரடித்து விட்டதோ, என்னமோ. ‘சரி. நாளைக்குப் பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.
தன் மீது விழுந்த அவச்சொல் ஒவ்வொன்றையும் துடைத்து டேமேஜ் கன்ட்ரோல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் பாரு. எனவே ஒவ்வொருவரையாக சந்தித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் விக்ரமைச் சந்தித்து “திவாகர் வேண்டாம்ன்னு சொல்லல.. எப்பப் பாரு அவர் கூடவே இருக்கறதா மத்தவங்க சொல்றதால.. இதுலயாவது வேற ஆள் இருக்கட்டும்ன்னு நெனச்சேன்’ என்று பாரு சொன்னது அப்பட்டமான பொய் என்பது தெரிந்தது. ‘லுக்’ என்று பாரு சொன்ன வார்த்தை அதற்கு உதாரணம். திவாகரின் தோற்றம், தன்னுடைய தோற்றத்திற்கு பொருந்தாது என்பதுதான் உண்மையான காரணமாக இருக்க வேண்டும்.
அடுத்து துஷாரிடம் சென்ற பாரு, அங்கும் ஒரு நீண்ட விளக்கத்தை அளிக்க “சரிக்கா.. சரிக்கா.” என்று லெஃப் ஹாண்டில் டீல் செய்தார் துஷார். ‘என்னதிது.. நாம என்னதான் விளக்கம் சொன்னாலும் எவனும் நம்ப மாட்றாங்க. பயிற்சி போதவில்லையோ?’ என்று தனியாக சென்று பாரு அனத்திக் கொண்டிருந்ததோடு எபிசோட் நிறைந்தது. வினை விதைத்தவன், வினையறுப்பான்.
இந்த இரண்டாவது வாரத்தில் அப்சரா வெளியேறுகிறார் என்பது மாதிரியான தகவல்கள் வந்திருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்