திருச்செந்தூரில் சுமார் 70 அடி உள்வாங்கி காணப்படும் கடல் கடலில் உள்ள பச்சை நிற பாறைகள் அதிகமாக காணப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. இன்று காலை முதல் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்படுகிறது. கடலானது அம்மாவாசை, பௌர்ணமி, அஷ்டமி போன்ற கனத்த நாட்களில் உள்வாங்கி காணப்படும். சில நேரங்களில் கடல் சீற்றமும் காணப்படும். கோவில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடற்கரை கரையிலிருந்து சுமார் 70 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகிறது. அதன் மேல் நின்று கடலில் கிடக்கும் சிற்பி சிறிய வகை சங்குகளை கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சேகரித்து வருகிறார்கள். குழந்தைகள் பாறையில் அமர்ந்து விளையாடி வருகிறார்கள். ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் கடற்கரையில் உள்ள பாறையில் ஏறி நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். கோவில் காவல்துறையினர் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் ஆழமான பகுதியில் போகக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.