2026-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அனைத்து 20 அணிகளும் தகுதி பெற்றுவிட்டன. சமீபத்தில் நடைபெற்ற கிழக்கு ஆசியா–பசிபிக் தகுதிச் சுற்றில், ஜப்பானை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் தன் இடத்தை உறுதி செய்துள்ளது. இதற்கு முன்னதாக நேபாளம் மற்றும் ஓமன் அணிகளும் தகுதி பெற்றிருந்தன.
இந்த முறை டி20 உலகக் கோப்பை, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் இணைந்து நடத்தப்பட உள்ளது. இதன் மூலம், 20 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடராக இது இரண்டாவது முறை அமைகிறது.
இந்த பெரும் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் அணிகள் — இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என மொத்தம் 20 நாடுகள் இடம்பிடித்துள்ளன.
இந்த உலகக் கோப்பை தொடருக்காக இந்தியாவின் ஐந்து மைதானங்களும், இலங்கையின் இரண்டு மைதானங்களும் தேர்வு செய்யப்பட உள்ளன. இறுதிப் போட்டி எங்கு நடைபெறும் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை அளிக்கிறது. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அந்தப் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும். பாகிஸ்தான் அணி இறுதிக்கு வரவில்லை என்றால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானமே இறுதிப் போட்டி அரங்காக மாறும்.
2026ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப் பெரும் ஆண்டாக அமைய உள்ளது. ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெறவுள்ளன. அதன்பின்னர், மகளிர் பிரீமியர் லீக் ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெறும். பின்னர், டி20 உலகக் கோப்பை பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும். அதற்கு உடனேயே, மார்ச் 15 முதல் மே 31 வரை ஐபிஎல் 2026 துவங்கும்.
எனவே, 2026 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கிரிக்கெட் கொண்டாட்டக் காலமாக மாறப்போகிறது. உலகின் அனைத்து அணிகளும் ஒரே மேடையில் மோதும் இந்த டி20 திருவிழா ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்!