ஆன்லைன் வர்த்தக நஷ்டம்.. 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை
TV9 Tamil News October 20, 2025 12:48 AM

ஓசூர், அக்டோபர் 20: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள கேசி நகர் அருகே இருக்கும் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சிவ பூபதி . இவர் தனது மனைவி பார்வதி மற்றும் மகன்கள் நரேந்திர பூபதி லதீஷ் பூபதி ஆகியோருடன் வசித்து வந்தார். நரேந்திர பூபதி மற்றும் சதீஷ் பூபதி ஆகிய இருவரும் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சிவ பூபதிக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்குளமாகும். கடந்த இரண்டரை வருடங்களாக ஓசூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே ஆன்லைனில் ஷேர் மார்க்கெட் பிசினஸ் செய்து வரும் சிவ பூபதிக்கு அதில் பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மனைவி பார்வதியுடன் அவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாலாஜா அருகே அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை!

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபமடைந்த பார்வதி தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனால் தனது இரண்டு மகன்களுடன் சிவ பூபதி வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையில் நேற்று (அக்டோபர் 18) காலை 6:15 மணிக்கு அகிலா கார்டனில் வசிக்கும் தனது தம்பி சிவ பிரகாசுக்கு, சிவ பூபதி போன் செய்துள்ளார்.

அப்போது நான் இனிமேல் உங்களுக்கு பிரச்சினையாக இருக்க மாட்டேன். போய் வருகிறேன், எனக் கூறிவிட்டு இணைப்பை தூண்டித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவ பிரகாஷ் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது சிவ பூபதியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது, இதனையடுத்து உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்து சென்றார்.

அங்கு நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது நரேந்திர பூபதி மற்றும் ரதீஷ் பூபதி ஆகியோர் ஓர் அறையில் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் சிவ பூபதி தூக்கில் பிணமாக  தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனைக் கண்டு சிவ பிரகாஷ் கதறி அழுதார்.

இதையும் படிங்க: 4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!

உடனடியாக அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் நேற்று அதிகாலையில் இரண்டு மகன்களையும் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துவிட்டு தனது தம்பிக்கு போன் செய்த சிவ பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதன் அடுத்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக சிவ பூபதி கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது, அதில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இந்த உலகத்தை விட்டுப் போவதாகவும், தனக்கு பின்னால் தன்னுடைய குழந்தைகளை பார்க்க ஆளில்லாததால் அவர்களையும் அழைத்து செல்கிறேன் என எழுதி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதே சமயம் ஒரு சார்ட் பேப்பரில் தான் என்னுடைய குழந்தைகள் படித்த பள்ளிக்கு நல்ல உள்ளம் உடையவர்கள் யாராவது சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும் என எழுதி வைத்துவிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.