அயோத்தி சரயு நதிக்கரையில் ஒளித்த 26 லட்சம் தீபங்கள்; மீண்டும் கின்னஸ் சாதனை..!
Seithipunal Tamil October 20, 2025 12:48 PM

தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளது உத்தரபிரதேச அரசு. இதில் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,கலந்துக்கொண்டு, விளக்கு ஏற்றி தீப உற்சவத்தை தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டுகளில் 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. இந்த ஆண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தீப உற்சவத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையிலும் வண்ண ஒளி லேசர் நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டமை, பார்ப்போரின் கண்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

அதன்பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,'ஸ்ரீராம ஜென்ம பூமியில் ராமர் முன்பு முதல் விளக்கை ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எதிர்க்கட்சியினருக்கு ராமர் மீது நம்பிக்கையில்லை. அவர்கள் ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்.

அயோத்தியை ரத்தத்தில் நனைப்பார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமே கடவுள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான். இது புதிய இந்தியாவின் சின்னம். இந்தியா ஒற்றுமையாக இருந்தால், உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் தீபத் திருநாளைக் கொண்டாடும் வாய்ப்பு நமக்கு தொடர்ந்து கிடைக்கும்,' என்று பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.