இந்தியாவில் வெள்ளி விற்பனை அதிகரிப்பு; லண்டனில் முடங்கியுள்ள வெள்ளி வர்த்தகம்..!
Seithipunal Tamil October 20, 2025 02:48 PM

இந்தியாவில் வெள்ளி விற்பனை அதிகரித்ததால் லண்டன் வெள்ளி வர்த்தகம் முடங்கியுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளியை ஒட்டி கொண்டாடப்படும் தந்தேராவின் போது முக்கிய நிகழ்வாக லட்சுமி பூஜை நடைபெறும். தீபாவளி, தந்தேரா - லட்சுமி பூஜை விழாக்களில் வழக்கமாக தங்கத்தை வைத்து மக்கள் வழிபடுவர். தற்போது தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் வெள்ளியின் பக்கம் மக்கள் திரும்பியுள்ளனர்.

முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோரும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கியதால் வெள்ளியும் விற்றுத் தீர்ந்துள்ளது. தற்போது, இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ஏராளமான முதலீட்டாளர்கள் வெள்ளியை வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் வெள்ளியின் வர்த்தகமான லண்டன் சந்தையிலேயே வெள்ளி இருப்பு தீர்ந்து வணிகம் முடங்கிவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், லண்டன் சந்தையில் விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபடும் வங்கிகள் ஒவ்வொரு விலையை நிர்ணயிப்பதால் லண்டன் சந்தையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 6,000 டன் வெள்ளி கொண்ட லண்டன் சந்தையே முடங்கியதால் வர்த்தக வட்டாரத்தில் கலக்கம் அடைந்துள்ளனர்.

அத்துடன், சீனாவில் திருவிழாவை ஒட்டி ஒருவார காலம் விடுப்பு என்பதால் சந்தைக்கு வெள்ளி வருவது தடைபட்டுள்ளது. வெள்ளி வரத்து சீராவதற்கு 04 நாள்களாகக் கூடும் என்றும் லண்டன் சந்தை வட்டாரங்கள் கூறியுள்ளன.

உலக அளவிலும் வெள்ளிக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருவதே விலை உயரக் காரணம் என கூறப்படுகிறது. சூரிய மின்னுற்பத்தி தகடுகள் தயாரிப்பில் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டர்கள், கணினி சிப்கள் உற்பத்தியிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.

EV கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும், பேட்டரிகளிலும் தங்கம் பயன்படுத்தப்படுவதால் தேவை மேலும் உயர்ந்துள்ளது. அத்துடன், மருந்துப் பொருள்களிலும் மருத்துவ சாதனங்களிலும் வெள்ளி பயன்படுத்தப்படுவதாலும் அதன் விலை உயர காரணமாக உள்ளது. நகைகள், பாத்திரங்கள், விளக்குகள், தட்டுகள், நகை தயாரிப்பிலும் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் தேவை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.