சுருளி வனப்பகுதியில் தொடரும் கனமழையால் அருவியல் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3வது நாளாக இன்றும் வனத்துறை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சுருளி அருவி தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ளது. இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அருகில் உள்ள கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்தது.
இதனால் அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு 3வது நாளாக இன்றும் வனத்துறையினர் இன்று தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.