தமிழகத்தில் தொடரும் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக பெய்துவரும் கனமழையாலும், பல்வேறு கிராமங்களுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு, வீடுகளுக்கும் மழைநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர்,நாகை மாவட்டத்திலும் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான நெற்பயிர்கள் உட்பட காய்கறிகளும் மழை, வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்திருப்பதோடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் உயிரிழந்திருப்பதால் விவசாயிகளும், வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, தொடர்மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் ஆற்றங்கரையோரம் வசிப்போரையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, மழை, வெள்ள பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .