உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – இந்த 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
TV9 Tamil News October 24, 2025 01:48 AM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகை (Vaigai Dam), முல்லை பெரியாறு, பிளவக்கல் போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி புயலாக மாறாது என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதனையடுத்து மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்டோபர் 24, 2025 அன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் மழை படிப்படியாக குறையும் என கூறப்பட்டடது. இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 24, 2025 அன்று வங்கக்கடலில் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதையும் படிக்க : என்னிடம் சொல்லாம எப்படி தண்ணீர் திறந்தீங்க? செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம் – செல்வப்பெருந்தகை கோபம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.  தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.  அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இதற்கிடையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களுக்கு அக்டோபர் 23, 2025 அன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக பேரிடர் மீட்பு குழு தயாராக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க :  பொளந்து கட்டும் பருவமழை.. சென்னையில் 12 பேரிடர் மீட்பு படைகள் தயார்!

தற்போது அக்டோபர் 24, 2025 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ள நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ள நிலையில் மேலும் பல சேதத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.