மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
துருவ் விக்ரமுடன் நடித்த பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர் உள்ளிட்ட நடிகர்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றனர். திரையுலகினரும் ‘பைசன்’ படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Bison Review - இரா.சரவணன்அந்த வகையில் ‘நந்தன்’ படத்தின் இயக்குநர் இரா. சரவணன், “‘நந்தன்’ படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தை இயக்கி இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறேன். இன்றுதான் ‘பைசன்’ பார்த்தேன்.”
பைசன்
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்தக் கதையின் மாந்தர்களில் ஒருவனாக கலந்துவிட்டேன். படம் முழுக்க தவிப்பும் கேள்வியுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற கிட்டானின் மூச்சு எனக்குள்ளும் இரைக்கத் தொடங்கியது.
“இதுதான் கதை” என்கிற நேர்க்கோட்டை மட்டுமே பார்த்துப் பயணிக்கிற படங்களுக்கு மத்தியில், ஒரு களத்தின் மொத்தத்தையும் காட்சிப்படுத்தி, எல்லோரின் வாழ்வையும் பந்தயத்தில் வைத்து, அதன் வழியே கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திகைக்க வைக்கிறார்.
மிகப் பெரிய போராட்டக்காரரால் மட்டுமே இத்தகைய கதைகளை எவரின் மதிப்பீட்டுக்கும் பயப்படாமல் எடுக்க முடியும். முன் துடித்து முன்னேறப் பாயும் மனிதர்களைச் சாதியும் அதையொட்டிய கொடுமைகளும் எப்படியெல்லாம் கூறுப்போடுகின்றன என்பதைக் பொளேரெனப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
மாரி செல்வராஜ்
இதுவரை சாதிய வலியைச் சொன்ன படங்களுக்கும் ‘பைசன்’ ஆக்கத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் வலியை தராசு முள்ளாக நின்று முன்வைத்திருக்கும் விதம் அற்புதமானது.
சமூகம் சார்ந்து படம் செய்பவர்கள் எந்த அளவுக்கு மெனக்கெட வேண்டும் என்பதற்கும் ‘பைசன்’ ஒரு நல்ல முன்னுதாரணம்.
பரிட்சைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை புத்தகம் புரட்டும் மாணவனைப் போல, ஒரு படத்தின் நூலளவு இடத்தில்கூட சமூகக் கூறுகளை நுழைத்துக் காட்டி,
“முன்னேறி மேல போங்கப்பா…” என நம் முதுகிலும் தட்டி அனுப்புகிறது ‘பைசன்’ படம்.
மாரி செல்வராஜ்
மகத்தான படைப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா. ரஞ்சித், உறுதுணையாக நின்ற அத்தனை உள்ளங்களும் கொண்டாடத்தக்கவர்கள்.
‘பைசன்’ பார்த்த நெகிழ்வில், தற்போது நான் இயக்கி முடித்திருக்கும் படத்தை இன்னும் ஐந்து நாட்கள் கூடுதலாக எடுக்க நினைக்கிறேன்.
அந்த அளவுக்கு பொறுப்பையும் போராட்டத்தையும் கற்றுக்கொடுத்திருக்கிறது ‘பைசன்’!
ஒரு படம் இதைவிட வேறென்ன செய்ய வேண்டும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.