சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை குறைந்தே இருந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டு வந்தது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததாகவும், அதனால் கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்த தக்காளி விலை திடீரென்று எகிறியதாகவும் வியாபாரிகள் கூறினர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை நேற்று ஒரே நாளில் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை தக்காளி விற்பனை ஆனது. இதை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை வெளி மார்க்கெட், சில்லரை கடைகளில் விற்றதை பார்க்க முடிந்தது.
இதேபோல், கடந்த 2 நாட்கள் முன்பு வரை ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையான பீன்ஸ், நேற்று விறு விறுவென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.90 வரை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே விற்றது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் இதைவிட அதிகரித்தே விற்பனை செய்தனர். வரத்து குறைவால் பீன்ஸ் விலை அதிகரித்து இருக்கிறது.