அசாம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடந்தது இந்த மர்ம குண்டுவெடிப்பு சம்பவம். கோக்ரஜார் ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், சலாகாட்டி நோக்கிச் செல்லும் பாதையில் அடையாளம் தெரியாத நபர்கள் ரெயில் தண்டவாளத்தில் ஐ.இ.டி (IED) வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.

இது அதிகமாக சரக்கு ரெயில்கள் இயக்கப்படும் முக்கிய பாதை என்பதால், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் இந்த வெடிகுண்டு வெடித்தது. பின்னர் அந்த வழியாக சென்ற சரக்கு ரெயிலின் ஓட்டுநர் தண்டவாளம் கடுமையாக சேதமடைந்திருப்பதை கவனித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை. ஆனால், வெடிகுண்டின் தாக்கம் தண்டவாளத்தில் பெரிய பிளவுகளை ஏற்படுத்தியது, இதனால் போக்குவரத்து தற்காலிகமாக முடங்கியது.பாதுகாப்பு காரணங்களால், அந்த வழித்தடத்தில் செல்ல இருந்த 8 ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
பின்னர் ரெயில்வே பொறியாளர்கள் அவசர சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, அதிகாலை 5.25 மணிக்கு மீண்டும் ரெயில் போக்குவரத்து வழமை நிலைக்குத் திரும்பியது.இதற்கிடையில், இந்த வெடிகுண்டை வைத்தது யார்? எந்த அமைப்பு பின்னணியில் இருக்கிறது? என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் சுற்றிவளைத்து சோதனைகள் நடத்தி வருவதால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.