
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பேருந்து தீ விபத்தில் பலர் பலியான சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் 43 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது இரு சக்கர வாகனம் ஆம்னி பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டதுடன் தீப்பற்றியது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அவசர வழி ஜன்னல்கள் வழியாகவும், கதவுகள் வழியாகவும் குதித்து வெளியேறி உயிர் தப்பினர். ஆனால் அனைவரும் வெளியேறுவதற்குள் தீ ஆம்னி பேருந்தில் பரவியதால் பலர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 21 பேர் இந்த விபத்தில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K