நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ். அப்பா நடிகராக இருந்ததால் சிறு வயது முதலே துருவுக்கும் சினிமாவில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அப்பா விக்ரம் நடிக்கும் படங்களின் கதைகள் பற்றி அப்பாவிடம் தொடர்ந்து விவாதிப்பது அவரின் பழக்கமாக இருந்தது.ஒரு கட்டத்தில் அவரை சினிமாவில் களமிறக்குவது என முடிவெடுத்த சியான் விக்ரம் தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி இயக்குனர் பாலா இயக்கத்தில் வர்மா என்கிற படம் மூலம் துருவை கோலிவுட்டில் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் உருவான பின் விக்ரம் குடும்பத்தினருக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்தி ஏற்படவில்லை.
எனவே ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் அதே கதையை வேறு இயக்குனரை வைத்து எடுத்து வெளியிட்டார்கள். இப்படி பல சிக்கல்களுடன் வெளியானதால் அந்த படம் பேசப்படவில்லை
. அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்த மகான் படத்தில் துருவ் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் ஓடிடியில் வெளியானது.
அதன்பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு துருவுக்கு கிடைத்தது. தென்மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த கதை தனக்கு முக்கிய படமாக அமையும் என்பதை உணர்ந்த கடந்த மூன்று வருடங்களாக இந்த படத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் துருவ்.
அப்படி வெளியான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூலையும் குவித்து வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் இப்படம் 40 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.எனவே துருவ் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் துருவ் ஒரு படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஒருபக்கம், டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் நடிக்கவிருக்கிறார். அதுதான் அவரின் அடுத்த படம் என சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் மணிரத்தினம் படத்தில் துருவ் நடிப்பது உறுதியாக இருக்கிறது. துவக்கத்தில் இந்த படத்தில் துருவையே ஹீரோவாக நடிக்க வைக்க மணிரத்தினம் முடிவெடுத்ததாகவும் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு வேறு ஒரு இளம் நடிகர் ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்த படத்தில் துருவுக்கு முக்கியமான வேடம் என சொல்லப்படுகிறது.
மேலும், மதராஸி, காந்தாரா 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ள ருக்மணி வசந்த் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் கம்போசிங் முடிந்து விட்டது. முழு கதையும் ரெடி. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை மணிரத்னம் துவங்குகிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது. இந்த படத்தில் நடித்தாலும் கணேஷ் பாபு இயக்கத்திலும் துருவ் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் வேலைகளும் ஒருபக்கம் நடந்து வருகிறது.