BBC
ஐஸ்லாந்தில் இந்த வசந்த காலத்தில் வரலாறு காணாத வெப்பம் ஏற்பட்ட பிறகு, அங்கு கொசுக்கள் வந்துவிட்டன. இதற்கு முன்னர் ஒருபோதும் ஐஸ்லாந்தில் கொசுக்கள் இருந்ததில்லை.
பூச்சி ஆர்வலரான பிஜோர்ன் ஹ்ஜால்டசன் கடந்த வாரம் பல இரவுகளில் விட்டில் பூச்சிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொசுக்கள் இருப்பதை அவர் கண்டறிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு பெண் கொசுக்களையும் ஒரு ஆண் கொசுவையும் அவர் பார்த்துள்ளார். அவை குலிசெட்டா அன்லுலாட்டா என வகையைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன, இவை குளிர்காலத்தில் உயிர்வாழக்கூடிய கொசுவின் சில இனங்களில் ஒன்றாகும்.
இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னர், உலகின் கொசுக்கள் இல்லாத இரு இடங்களில் ஐஸ்லாந்தும் ஒன்றாக இருந்தது.
அதன் கடும் குளிர் நிலவும் காலநிலையும் இதற்கு ஒரு காரணமாகும். கொசுக்கள் இல்லாத மற்றொரு மண்டலம் அண்டார்டிகா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் நகரின் தென்மேற்கில் உள்ள பனிப்பாறை பள்ளத்தாக்கான க்ஜோஸில் கொசுக்கள் காணப்பட்டன.
Getty Images எப்படி வந்தது?
ஐஸ்லாந்து ஊடகங்களின்படி, ஹ்ஜால்டசன் தான் கண்டறிந்த விஷயத்தை உள்ளூர் வனவிலங்குகளுக்கான பேஸ்புக் பக்கத்தில், பூச்சிகளின் படங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
"இது நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று என்பதை அதைப் பார்த்த உடனே உணர்ந்துக் கொண்டேன்" என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்-ஐ ஐஸ்லாந்தின் Morgunblaðið செய்தி தளம் வெளியிட்டது. "கொசுக்கள் இல்லாத கடைசி கோட்டையும் இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது" என்று அந்த செய்தி கூறியது.
ஹ்ஜால்டசன் தான் கண்டறிந்தவை கொசுக்கள்தான் என்பதை உறுதியாக அடையாளம் காண்பதற்காக ஐஸ்லாந்து இயற்கை வரலாறு நிறுவனத்திற்கு அனுப்பினார். அங்கு பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ஃப்ரெஸ்சன், அவை கொசுக்களே என உறுதிப்படுத்தினார்.
இந்த இனங்கள் ஐரோப்பா மற்றும் வட ஆஃப்ரிக்காவின் சில பகுதிகளில் பொதுவானவை. ஆனால் அவை ஐஸ்லாந்தை எவ்வாறு சென்றடைந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை என அல்ஃப்ரெஸ்சன் சிஎன்என் செய்தியிடம் கூறினார்.
ஐஸ்லாந்தில் இதுவரை கொசுக்கள் இல்லாததற்கு முக்கிய காரணம், குளிர்ந்த பருவ நிலை மற்றும் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேங்கி நிற்கும் நீர் இல்லாததுதான் என்று உலக மக்கள் தொகை மதிப்பாய்வு தெரிவித்துள்ளது.
Getty Images இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம்
இதுவரை இல்லாத வகையில் ஐஸ்லாந்தில் இந்த ஆண்டு, அதிக வெப்பநிலை பதிவாகி பல சாதனைகளை முறியடித்தது.
பொதுவாக, ஐஸ்லாந்து மே மாதத்தில் 20C (68F) க்கும் அதிகமான வெப்பநிலையை அடைவது மிக அரிது. அப்படி அதிக வெப்பநிலை இருந்தாலும், அது இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்காது என ஐஸ்லாந்து வானிலை அலுவலகம் குறிப்பிடுகிறது.
இருப்பினும், இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை 10 நாட்களுக்கு மேல் நிலவியது.
இந்த ஆண்டு மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் ஐஸ்லாந்தில் பதிவானது. யேகில்ஸ்டாதிர் விமான நிலையத்தில் வெப்பநிலை 26.6C (79.8F) ஐ எட்டியது.
கடந்த ஆண்டு உலகின் மிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது, மேலும் வளிமண்டலம், பெருங்கடல்கள் மற்றும் நிலம் "சந்தேகத்திற்கு இடமின்றி" மனிதர்களால் வெப்பமாக்கியுள்ளது என்று ஐ.நா.வின் காலநிலை அமைப்பு கூறியுள்ளது.
"ஐஸ்லாந்தில் கொசு இனங்கள் இனி எப்போதுமே வசிக்கும் பருவநிலை வந்துவிட்டதா" என்பதைப் பார்க்க வசந்த காலத்தில் மேலதிக கண்காணிப்பு தேவைப்படும் என்று அல்ஃப்ரெஸ்சன் கருதுகிறார்.
கொசுக்கள் எப்படி வந்தது என்பது குறித்து அல்ஃப்ரெஸ்சன் ஆச்சரியப்படுகிறார்.
இதற்கிடையில், ஹால்டசன், தான் கவனித்த மாதிரிகளின் தோற்றத்தைப் பற்றி குறிப்பிடும்போது,
"ஐஸ்லாந்தின் தொழில்துறை பகுதிகளில் ஒன்றான க்ருந்தர்தாங்கி மீது சந்தேகம் ஏற்படும். அது என்னுடைய இடத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு கப்பல்கள் மற்றும் கண்டெய்னர்களில் பொருட்கள் வருவது வழக்கம். எனவே அந்த வழியில் கொசுக்கள் ஐஸ்லாந்திற்கு வந்திருக்கலாம்," என்று Morgunblaðið செய்தியிடம் அவர் கூறினார்
"ஆனால் அவற்றில் மூன்று நேராக என் தோட்டத்திற்குள் வந்திருக்கின்றன என்றால், உண்மையில் ஐஸ்லாந்தில் அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு