தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு - ரூ.186 கோடி ஒதுக்கீடு
Top Tamil News October 24, 2025 01:48 PM

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதன்படி சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 29, 455 தூய்மை பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட உள்ளது. மூன்று சிப்டுகள் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு உணவு வழங்க 186 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி காலை உணவு 5,159 பேருக்கும், மதிய உணவு 22,886 பேருக்கும், இரவு உணவு 1410 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உணவு வழங்க தேர்வு செய்யப்படும் நிறுவனம் உணவு தயாரித்தல் தொடங்கி விநியோகம் வரை அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எப்எஸ்எஸ்ஐ சான்று அதன் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், திட்ட ஆலோசகரை நியமித்து இதை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.