பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள டியூட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புயல் போல வீசிக் கொண்டிருக்கிறது. வெளியான ஐந்து நாட்களிலேயே ரூ.95 கோடி வசூலித்து, தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனையை பதிவு செய்துள்ளது. இன்று அல்லது நாளைக்குள் டியூட் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் டுடே, டிராகன் போன்ற வெற்றிப் படங்களுக்கு பிறகு, கீர்த்தி சுவரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சரத்குமார், மிக முக்கியமான கதாபாத்திரத்தில், கதையின் மையத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அக்டோபர் 17ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே முழு திருப்தியை அளித்திருக்கிறது. கமர்ஷியல் திரைக்கதை அமைப்புடன், சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான செய்தியையும் இப்படம் கூறுகிறது. குறிப்பாக ஆணவக் கொலை குறித்து இயக்குநர் எடுத்துரைத்த விதம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
“தாலிக்கு மரியாதை இல்லை; தாலிக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் உணர்வுக்குத்தான் மரியாதை”, “உங்கள் ஆணவத்துக்காக கொலை பண்ணுவீங்களா?.. தாங்க முடியலனா நீங்க போய் சாகுங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
விமர்சகர்கள் மத்தியில் படம் ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வசூல் தரப்பில், டியூட் 5 நாட்களில் உலகளவில் ரூ.95 கோடியை தாண்டியுள்ளது. இதில் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன், வெளிநாடுகளிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தமிழ் படமாகும் டியூட். இப்படத்தின் வெற்றியால் அந்த நிறுவனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதற்கிடையில், நேற்று சென்னையில் டியூட் படத்தின் வெற்றி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட சரத்குமாரின் பேச்சு விழாவை கலகலப்பாக்கியது.
அவர் பேசியதாவது –
“கீர்த்திஸ்வரன் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது, அதனால்தான் இந்தப் படத்தில் நடித்தேன். நான் படத்தில் வருவது போலவே ஜாலியான ஆள் தான். உடல் பெரிசா இருக்கிறது, அதனால்தான் வெளியே தெரியல! இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் சமூகத்திற்கு தேவையான கருத்தை கீர்த்தி மிக ஜனரஞ்சகமாக சொன்னிருக்கிறார்.
தாலிக்கு ஒருத்தன் புள்ளை பெத்துக்க ஒருத்தனா என்று கேட்டதெல்லாம் கீர்த்தி காண்பித்ததுதான்! இப்போ எல்லோரும் என்னை ‘டியூட்’னு அழைக்க தொடங்கிட்டாங்க!” என்று கூறிய சரத்குமார், அடுத்ததாக தீபிகா படுகோனேக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் என நகைச்சுவையாக கூறினார்.
“ஐஸ்வர்யா ராய்க்கே கணவனாக நடித்துட்டேன்; அடுத்தது தீபிகா தான்! யாரும் பொறாமைப்பட வேண்டாம்!” என்று கூறிய அவர், விழாவை கலகலப்பாக முடித்தார்.
மொத்தத்தில், டியூட் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெரும் வெற்றி கண்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனுக்கு இது ஒரு மாபெரும் மைல்கல் என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.