Sputnik/Alexander Kazakov/Pool via Reuters and Reuters
ரஷ்யா - அமெரிக்கா இடையிலான உறவில், கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவம் ஏற்கெனவே நடந்ததை அப்படியே நினைவுப்படுத்துவது போல் இருந்தது.
அதாவது, ரஷ்யாவுக்கு எதிரான போரில், யுக்ரேனுக்கு டோமஹாக் ஏவுகணைகளை வழங்குவது குறித்த அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினர்.
அந்த உரையாடலின் விளைவு - ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் அமெரிக்க - ரஷ்ய சந்திப்புக்கான அறிவிப்பு வெளியானது.
இதே போன்ற ஒரு தருணம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. ரஷ்யா மீதான கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புதின் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்ஐ சந்தித்தார். அந்த சந்திப்பின் விளைவு - அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க - ரஷ்ய சந்திப்பு அறிவிக்கப்பட்டது.
அலாஸ்கா சந்திப்பு மிக குறைந்த முன் தயாரிப்புகளுடன் நடைபெற்றது, அதன் விளைவும் மிக குறைவாகவே இருந்தது.
ஆனால் இந்த முறை புடாபெஸ்ட் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது டிரம்ப் அந்த சந்திப்பை ரத்து செய்துள்ளார்.
Kremlin டிரம்பின் விரக்தி
"நாம் அடைய வேண்டிய இடத்தை நோக்கி செல்கிறோம் என்று தோன்றவில்லை" என்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறினார்.
அது மட்டுமல்ல. இதற்கு முன்பு, டிரம்ப் தான் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படுத்தப் போவதாக கூறிய அச்சுறுத்தல்களை அமல்படுத்தவில்லை. ரஷ்ய விவகாரத்தில் கடுமையான போக்கை விட மென்மையான போக்கை கையாண்டார்.
ஆனால் தற்போது அப்படி இல்லை. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் -ராஸ்ன்ஃபெட் மற்றும் லுகாயில் மீது டிரம்ப் தடைகள் விதித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ரஷ்ய அதிபர் புதினை போரில் பின்வாங்க வைக்கப் போவதில்லை. எனினும் இது ரஷ்ய - யுக்ரேன் போரை நிறுத்துவதில் ரஷ்யா எந்தவித சமரசமும் செய்ய விரும்பாதது குறித்து டிரம்பின் விரக்தியை காட்டுகிறது.
இந்த விதமான கடுமையான போக்கை ரஷ்யர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய புதின், அமெரிக்காவின் இந்த புதிய தடைகள், "நட்புறவில்லாத செயல்" என்றும் ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்றும் குறிப்பிட்டார்.
"ஆனால் சுய மரியாதை கொண்ட எந்தவொரு நாடும், எந்தவொரும் மக்களும் அழுத்தத்தின் கீழ் எந்த முடிவையும் எடுப்பதில்லை" என்றார் புதின்.
ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் இன்னும் நேரடியாக கூறினார்.
"அமெரிக்கா நமது எதிரி. அமெரிக்காவின் பேசிக்கொண்டே இருக்கும் 'சாமாதான தூதர்' தற்போது ரஷ்யா மீதான போருக்கான பாதையில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்" என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
"தற்போது எடுத்திருக்கும் முடிவுகள் ரஷ்யாவுக்கு எதிரான போரின் செயலாகும்" என்றும் குறிப்பிட்டார்.
Reuters ரஷ்யாவின் தேசிய காவலர் படையினர் அக்டோபர் 23 அன்று மத்திய மாஸ்கோவில் உள்ள செயின்ட் பசில் கதீட்ரல் அருகே சிவப்பு சதுக்கத்தில் ரோந்து செல்கின்றனர். முரண்பாடு என்ன?
இந்த முறை என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது?
முதல் சந்திப்பு போல், அவசர அவசரமாக இரண்டாவது சந்திப்பை நடத்தாமல் இந்த முறை டிரம்ப் சற்று கவனமாக உள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுடன் சந்திப்புக்கான அடித்தளத்தை அமைக்குமாறு வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவை டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
இப்போது ஒரு சந்திப்பு நடைபெற்றால் அது ஒரு திருப்புமுனையை உருவாக்க வாய்ப்பில்லை என்பது விரைவில் தெளிவாகியது.
யுக்ரேனில் தற்போதைய போர் எல்லைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் டொனால்ட் டிரம்பின் யோசனையை ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது.
ரஷ்யா குறைந்தபட்சம் கிழக்கு யுக்ரேனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள உறுதியாக உள்ளது. அதன் பெரும்பகுதியை ரஷ்யா கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது.
ஆனால் யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி யுக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸின் பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்க மறுக்கிறார்.
EPA எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு
இரண்டாவது அமெரிக்க - ரஷ்ய சந்திப்பை ரஷ்யா வரவேற்றிருக்கும்.
அலாஸ்காவில் நடைபெற்ற முதல் சந்திப்பு ரஷ்யாவுக்கு ஒரு ராஜ்ஜிய மற்றும் அரசியல் வெற்றியாக இருந்தது. அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பு, ரஷ்யா சர்வதேச அரங்குக்கு திரும்பியதை குறிப்பதாகவும், ரஷ்யாவை ஒதுக்க வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் முயற்சியியின் தோல்வியாகவும் பார்க்கப்பட்டது.
கடந்த வாரம் ரஷ்ய அரசு ஊடகத்தில், ஐரோப்பாவில் ஐரோப்பிய ஒன்றியம் இல்லாமல் டிரம்ப் உடன் நடைபெறும் சந்திப்புக்கு (புடாபெஸ்டில் நடைபெறுவதாக இருந்த சந்திப்பு) ஆதரவான செய்திகள் வெளியாகின. இந்த சந்திப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்த அடி என்றும் ரஷ்யாவில் பேசப்பட்டது.
அதே நேரம், அந்த சந்திப்பு நடைபெற்றாலும், ரஷ்யா விரும்பும் விளைவை அது ஏற்படுத்தும் என்று பலரும் நம்பவில்லை.
சில ரஷ்ய செய்தித்தாள்கள் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து போரிட வேண்டும் என்று கூறின.
"போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா ஒப்புக் கொள்ள ஒரு காரணமும் இல்லை" என்று ரஷ்ய நாளிதழான மாஸ்கோவ்ஸ்கி காம்ஸோலெட்ஸ் குறிப்பிட்டது.
ரஷ்யாவுக்கு என்ன வேண்டும்?இதனால் ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்று அர்த்தமில்லை.
ரஷ்யாவுக்கு அமைதி வேண்டும். ஆனால் ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு. தற்போது அந்த நிபந்தனைகள் யுக்ரேனுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அமெரிக்காவுக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்று தோன்றுகிறது.
அந்த நிபந்தனைகள் எல்லைகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. யுக்ரேன் போருக்கு "ஆணி வேராக" உள்ளவற்றை தீர்க்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
ஆணி வேர் என்று கூறுவதன் மூலம் ரஷ்யா தனது கோரிக்கைகளை விரிவுப்படுத்திக் கொள்ள முடிகிறது. நேட்டோ அமைப்பின் கிழக்கு நாடுகளை உள்ளடக்கும் முயற்சியை நிறுத்தும் கோரிக்கை உட்பட அதில் அடங்கும்.
தனது வளையத்துக்குள் மீண்டும் யுக்ரேனை கட்டாயப்படுத்தி கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை ரஷ்யா இப்போது கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
ரஷ்யா மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்க டிரம்ப் தயாராக இருக்கிறாரா?
தயாராகதான் இருப்பார் போலும்.
ஆனால், மீண்டும் கடந்த முறை நடைபெற்ற நிகழ்வுகளும் விளைவுகளுமே இப்போதும் நடைபெறுவதற்கான வாய்ப்பும் உண்டு.
"டிரம்ப் இழுபறி ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை ரஷ்யா முன்னிலையில் உள்ளது" என்று புடாபெஸ்ட் சந்திப்பு அறிவிக்கப்பட்ட பிறகு மாஸ்கோவ்ஸ்கி காம்ஸோலெட்ஸ் எழுதியது.
''புடாபெஸ்டில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பாவின் அழைப்புகள் மற்றும் சந்திப்புகளால் டிரம்ப் எதிர்முனையில் இழுக்கப்படுவார். ஆனால் புதின் அவரை மீண்டும் நமது பக்கம் இழுத்துவிடுவார்" என்று குறிப்பிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு