அருணாச்சலப் பிரதேசத்தின் பாபும் பரே மாவட்டத்தில், கோமச்சு யேகர் என்ற 19 வயது இளைஞர் வியாழக்கிழமை அன்று தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளில், தான் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீ டாலோ பொட்டாட்டோ மற்றும் செயல் பொறியாளர் ஸ்ரீ லிக்வாங் லோவாங் என்று யேகர் குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட காலமாக இருவரும் தன்னைச் பாலியல் ரீதியாகச் சுரண்டி, துன்புறுத்தி, அச்சுறுத்தி வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட தொடர்ச்சியான அவமானமும் வற்புறுத்தலும் தான் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்றும் அவர் அந்தக் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.
யேகர் ஒப்பந்த அடிப்படையில் பல்வகை ஊழியராகப் (multi-tasking staff) பணிபுரிந்து வந்தார். இந்தத் தற்கொலை தொடர்பாக யேகரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், இரு அதிகாரிகள் மீதும் தற்கொலைக்குத் தூண்டுதல், பாலியல் சுரண்டல், மனரீதியான துன்புறுத்தல், மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, தற்கொலைக் குறிப்பில் பெயரிடப்பட்டிருந்த அந்த பொறியாளரும் திருப் மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.