ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு: விசாரணையை தள்ளி வைத்துள்ள உயர்நீதிமன்றம்..!
Seithipunal Tamil October 25, 2025 10:48 AM

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் உள்பட பலரை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை போலீசார் சரி வர விசாரிக்கவில்லை என்று கூறி சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கோரி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தார்.குறித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டு விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், வேண்டுமென்றால், இந்த மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளார். அத்துடன், குறித்த வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.