கந்த சஷ்டி விரதம் இருக்க முடியலையா... அப்போ கந்தன் கருணையைப் பெற இதை பண்ணுங்க...
Top Tamil News October 25, 2025 10:48 AM

கந்த சஷ்டி விழா ஐப்பசி மாதத்தின் பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதி வரை கொண்டாடப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு அடுத்து இந்துக்கள் பலராலும் கொண்டாடப்படும் விழாவாகக் கந்த சஷ்டி உள்ளது.

கந்த சஷ்டி விழாவின் போது முருக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற முருகனின் அறுபடை வீடுகளிலும் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் மாறிவரும் தற்போதைய காலச் சூழ்நிலையில் பக்தர்கள் பலரும் வேலை நிமித்தமாக மற்றும் தொழில் காரணமாகப் பக்தர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வர வேண்டிய காரணத்தினால் கோவில்களில் தங்கி விரதம் மேற்கொள்வது பலராலும் முடியாததாகி விடுகிறது.

மேலும், உடல்நிலை காரணமாகப் பலரால் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க முடியாத நிலையும் நிலவுகிறது. இவ்வாறு கடுமையான விரதம் இருக்க முடியாதவர்கள் கந்தனின் கருணையைப் பெற எளிதாக என்ன செய்யலாம்

மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு பிறகு வரும் அமாவாசைக்கு மறுநாளான பிரதமை திதி துவங்கி, சூரசம்ஹாரம் நடைபெறும் சஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் சிலர் விரதம் இருப்பார்கள். இன்னும் சிலர், சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவம் வரை ஏழு நாட்கள் விரதம் கடைபிடிப்பார்கள்.

 கந்த சஷ்டியின் ஏழு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், சஷ்டி திதி வரும் சூரசம்ஹார நாளான அக்டோபர் 27ம் தேதி ஒரு நாள் மட்டும் கந்த சஷ்டி விரதம் இருந்து, முருகப் பெருமானின் அருளை பெற முடியும்.

ஒரு நாள் சஷ்டி விரதம் இருக்கும் முறை :

அக்டோபர் 27ம் தேதி அதிகாலையிலேயே எழுந்து, குளித்து விட்டு, வீட்டில் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வைத்து, என்ன காரணத்திற்காக அல்லது என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறீர்களோ அதை முருகப் பெருமானிடம் சொல்லி மனதார வேண்டிக் கொண்டு, "முருகா நீயே துணை...என்னுடைய விரதத்தை நன்றாக நிறைவு செய்ய அருள் செய்து, என்னுடைய விரதம் முழு பலனை தந்து, உன்னுடைய அருளால் என்னுடைய வேண்டுதல்கள் நிறைவேற அருள் செய் முருகா" என மனதார வேண்டிக் கொண்டு, விரதத்தை துவக்குங்கள். ஷட்கோண தீபம் ஏற்றுவது சிறப்பு. முழுவதுமாக உபவாசமாக இருக்க முடிந்தால் விரதம் இருக்கலாம். இல்லை என்றால் பால், பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கலாம்.

முருகப் பெருமானின் படத்திற்கு செவ்வரளி, முல்லை, செம்பருத்தி ஏதாவது மலர்கள் சூட்டி, முருகனுக்கு பால் மற்றும் பழம் மட்டும் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். முருகனுக்கு விரப்பமான கந்த சஷ்டி கவசம், வேல் மாறல், திருப்புகழ் என ஏதாவது ஒரு பாடலை நாள் முழுவதும் பாடிய படி இருக்கலாம். எதுவும் தெரியவில்லை என்றால், "ஓம் சரவண பவ" மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். முடிந்தால் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனையும், சூரசம்ஹார நிகழ்வையும் தரிசிக்கலாம். முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே டிவி.,யில் சூரசம்ஹாரத்தை கண்டு தரிசிக்கலாம். மாலையில் முருகப் பெருமானுக்கு பல விதமான கலவை சாதங்கள் அல்லது சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு, கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும். குளித்து விட்டு வீட்டில் ஷட்கோண தீபம் ஏற்றி, முருகனுக்கு படைத்த பால் அல்லது சாதத்தை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டு, நீங்களும் சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். விரதத்தை நல்ல படியாக நிறைவு செய்ய அருள் புரிந்ததற்காக முருகப் பெருமானுக்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டும். முருகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனையும் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் வீட்டில் முருகன் விக்ரஹம் அல்லது வேல் வைத்திருந்தால் அதற்கு அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்து, விரதத்தை நிறைவு செய்யலாம். இப்படி ஒரு நாள் விரதம் இருந்தாலும் ஏழு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்த பலனை பெற முடியும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.