தமிழ் சினிமாவில் எவர்கிரீன் கூட்டணி என்றால் அது ரஜினி - கமல் கூட்டணிதான். தான் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்திலிலேயே கமலுடன் இணைந்து நடித்தார் ரஜினி. அதன்பின் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பயணிப்போம் என முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினர். ரஜினி தொடர் ஹிட் படங்களை கொடுத்து சூப்பர்ஸ்டாராக மாறினார். கமல் காதல் மன்னனாக மாறி காதல் படங்களில் நடித்தார்.ரஜினி என்றால் ஸ்டைல், கமல் என்றால் ரொமான்ஸ், டான்ஸ் என்ன ரசிகர்கள் ரசித்தார்கள்.
கமலும் ரஜினியும் இணைந்து நடித்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் அது நடக்கவில்லை.இந்நிலையில்தான் கமலும், ரஜினியும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும் கூலி படம் வெளியான நேரத்தில் செய்திகள் வெளியானது. கமலும் அதை உறுதி செய்தார். ரஜினி அதை உறுதி செய்தாலும் இயக்குனர் என்னும் முடிவாகவில்லை என்றார். எனவே அந்த படத்தில் லோகேஷ் இயக்குவாரா? அல்லது வேறு இயக்குனரா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ஒருபக்கம் கமலும் ரஜினியும் இணைந்து நடிப்பது நடக்குமா? என்கிற சந்தேகமும் ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கமலின் மகள் ஸ்ருதியும், ரஜினியின் மகள் சௌந்தர்யாவும் கலந்து கொண்டனர். அப்போது ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பது பற்றி ஆங்கர் கேட்டபோது ‘அப்பாவும் ரஜினி சாரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. நானும் அதற்காக காத்திருக்கிறேன்’ என ஸ்ருதிஹாசன் சொன்னார். சௌந்தர்யாவோ ’கமல் அங்கிள் பேனரில் கண்டிப்பாக ரஜினி சார் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சொல்ல வேண்டிய நேரத்தில் தலைவர் கரெக்டா சொல்லுவார்’ என சொல்லி மேடையை அதிர வைத்தார்.
ரஜினி அரசியலில் ஈடுபட முடிவெடுத்தபோது ‘அரசியல் கட்சி துவங்குவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என சொல்லிக்கொண்டே இருந்தார். அது மீம்ஸ் மெட்டீரியலாகவும் மாறியது. தற்போது அவரின் மகள் சௌந்தர்யா அதே ஸ்டைலில் பேசியிருக்கிறார்.