ஈரோடு மாவட்டத்தில் நீர் நிலையில் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி கிராமத்தில் மரணமடைவோரின் சடலங்களை, அந்த பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் விவசாய நிலத்தில் உள்ள கிணறும், ஆழ்துளை கிணறும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் கொடுமுடி தாசில்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிவகிரியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி மற்றும் கீழம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பி.பேபி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், மயானம் என அறிவிக்கப்படாத இடத்தில் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால், ஓடை புறம்போக்கில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து, மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.இதில் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமானால் சிவகிரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.