பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுப் புளிக்காடு கிராமத்தில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஸ்கர்(53) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிற நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளித் தலைமை ஆசிரியை நரியம்பாளையம் விஜயாவிடம்(55) புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்தப் புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் பாஸ்கர் 7 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஆசிரியர் பாஸ்கர் மற்றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை விஜயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரையும் இடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுஉள்ளார்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த கொடுமை தொடர்கதையாகி வருகிறது. காவல்துறை கைது செய்தாலும், கல்வித் துறை இடைக்கால பணிநீக்கம் செய்திருந்தாலும், இது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாது தடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு தமிழக அரசும், கல்வித்துறையும் தவறி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வக்கிரம் பிடித்த ஆசிரியர்களையும், அதற்கு துணை போகும் நபர்களையும் பணியமர்த்தியதே கொடுமைகளுக்கு காரணம். பெரும்பாலும் இந்த கொடும் செயல்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமனம் செய்யாமல், லஞ்சம் மற்றும் ஊழலை பிரதானமாக கொண்டு தகுதியற்ற வக்கிர புத்தி கொண்டவர்களை நியமிப்பதே இந்த கொடூரங்களுக்கு காரணம். இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை கூட கண்டுகொள்ளாது இருந்ததற்கு காரணம் பணம் அல்லது அரசியல் பலமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
அரசு பள்ளிகளை மேற்பார்வையிட பல அடுக்கு கட்டமைப்பு இருப்பதாக சொன்னாலும், அப்பாவி சிறுமியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அவலத்தின் உச்சக்கட்டம். இந்த கொடுமையை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளி கல்வித்துறையின் கட்டமைப்பை உடனடியாக மறு ஆய்வு செய்து, தவறான ஆசிரியர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை.
ஆசிரியர்களில் பெரும்பாலோனோர் அரசியல் கட்சிகளின் பின்புலத்தில், அரவணைப்பில் உள்ளனர் என்பது உலகறிந்த ரகசியம். எங்கும் அரசியல், எதிலும் அரசியல், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. சமுதாய சீர்கேட்டின் உச்சக்கட்டத்தில் தமிழகம் உள்ளதை நம்மால் காண முடிகிறது.
டாஸ்மாக் மது கூட இந்த விவகாரங்களுக்கு பெரும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் பள்ளி கல்வித் துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் பள்ளி கல்வி துறை அமைச்சர்அன்பில் மகேஷ் அவர்கள் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.