அதிகாலை முதல் சென்னையில் மிதமான மழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
Seithipunal Tamil October 28, 2025 09:48 AM

 வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. தாய்லாந்து நாடு பரிந்துரைத்த பெயரின்படி, இப்புயலுக்கு “மோன்தா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் மேலும் தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது மோன்தா புயலின் மையம் சென்னைக்கு தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தூரத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இதன் தாக்கத்தால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பரவலான மிதமான மழை பெய்து வருகிறது.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து, சில இடங்களில் சிறிய அளவில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

மழை அதிகரிக்கும் வாய்ப்பை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதே நேரத்தில், பள்ளி நேரத்தில் பெய்த மழையால் மாணவர்கள் குடை, ரெயின் கோட் அணிந்து பள்ளிகளுக்குச் சென்றனர். சில சாலைகளில் வாகன போக்குவரத்து மந்தமானது.

மோன்தா புயல் மேலும் வலுப்பெறக்கூடும் எனவும், அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திற்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.