ரஜினியும் கமலும் 50 வருட கால நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமா உலகில் இப்படி ஒரு நட்பு மிகவும் அபூர்வம். நடிகர் ரஜினி முதல் முதலாக அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான போது அந்த படத்தின் ஹீரோ கமல். அதாவது ரஜினி சினிமாவில் அறிமுகமாகும் போது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார்.
அதன்பின் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் கமலும் ரஜினியும் சில படங்களில் இணைந்து நடித்தனர். தயாரிப்பாளர்கள் ஒரு நடிகருக்கான சம்பளத்தை பிரித்து ரஜினிக்கும், கமலுக்கும் கொடுத்ததால் இனிமேல் நாம் தனியாக நடிப்போம் என கமல் அறிவுரை சொல்ல ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார். இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்து தங்களுக்கான படங்களில் நடித்தனர்.
சினிமாவில் போட்டி நடிகர்கள் எப்போதும் நண்பர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் இதில் ரஜினியும் கமலும் விதிவிலக்கு. போட்டி நடிகர்களாக இருந்தாலும் சினிமா மற்றும் சொந்த வாழ்வில் முக்கியமான விஷயங்களை இருவரும் கலந்து ஆலோசிக்கிறார்கள். ரஜினிக்கு எப்போது குழப்பம் ஏற்பட்டாலும் கமலை போனில் தொடர்பு கொள்வார். அதேபோல், கமல் புதிதாக கட்சி துவங்கிய போது ரஜினியை நேரில் வந்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்றார்.

அதேபோல் எந்த மேடையாக இருந்தாலும் தன்னை தாழ்த்தியும், கமலை உயர்த்தியும் பேசுவார் ரஜினி. இதை மற்ற நடிகர்கள் செய்ய மாட்டார்கள். இந்நிலையில்தான் 40 வருடங்களுக்கு பின்பு ரஜினியும், கமலும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்தை நெல்சன் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இதற்கு பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. தக் லைப் படத்தை தயாரித்த வகையில் கமல்ஹாசனுக்கு 180 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு அது கடனாக மாறிவிட்டதாக ரஜினியிடம் கமல் சொல்லியதால் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்து கொடுக்க ரஜினி முடிவெடுத்தார். அதுதான் விரைவில் நடக்கப்போகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.