இராஜராஜ சோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி வருகிற 1-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழன் பிறந்த மற்றும் முடிசூட்டிய நாள் சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2 நாட்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி நடப்பு ஆண்டு மாமன்னர் ராஜராஜசோழனின் 1040-வது சதயவிழா வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 8.15 மணிக்கு தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் சதயவிழா ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார்.
காலை 9 மணிக்கு தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9.30 மணிக்கு சதய விழா தொடக்க நிகழ்ச்சி தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்குகிறார். சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் வரவேற்று பேசுகிறார். விழாவை முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசுகிறார்.
தொடர்ந்து கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, வரலாற்று நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு 2-ம் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது. காலை 7.20 மணிக்கு தஞ்சை பெரியகோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8 மணிக்கு திருமுறை திருவீதிஉலா நடக்கிறது.
காலை 8.10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து மங்கள இசை, பரதநாட்டியம், தேவாரப் பண்ணிசை, இசை நாத சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் செப்புத் திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் இன்னிசையுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம் முதலிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வீதிஉலா நடக்கிறது.
இரவு 7.05 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்குகிறார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே முன்னிலை வகிக்கிறார். சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் வரவேற்று பேசுகிறார். விழாவில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு பேசுகிறார். குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் விருதுகளை வழங்கி பேசுகிறார். முடிவில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா நன்றி கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை சதய விழாக்குழு, அரண்மனை தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இராஜராஜ சோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி வருகிற 1-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.