கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஆம்னி பேருந்துகள் மூலமாக வரவழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் தாந்தோணி மலை சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி. இவரது மனைவி ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்சனா, சாய் ஜீவா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். ஆனந்த ஜோதியையும், அவரது குடும்பத்தினரையும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் உள்ள அறையில் விஜய் தனியாக சந்தித்துள்ளார். இதுதொடர்பாக ஆனந்த ஜோதி கூறுகையில், “விஜய் இந்த துயர சம்பவத்திற்கு பிறகு பெரும் மன உளைச்சலில் இருக்கிறார். இதனால் அவர் உடல் இளைத்து மெலிந்து காணப்பட்டுள்ளார். மன அளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை காணவே தங்களுக்கு கஷ்டமாக இருந்தது, என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னித்து விடுங்கள் என்று கூறி, எனது தாயார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார், மேலும் உங்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் தன்னிடம் தயங்காமல் கேளுங்கள் எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்து தருகிறேன் என விஜய் கூறினார்.
முன்பு வீடியோ காலில் பேசிய போது தங்களை நேரில் சந்திப்பதாக கூறியிருந்த நிலையில் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தால் கூட அவரை தனிப்பட்ட முறையில் நாங்கள் சந்தித்திருக்க முடியாது. கூடவே கட்சியினர் மற்றும் போலீசார் இருந்திருப்பார்கள். மேலும் காவல்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் கரூர் வர முடியவில்லை, அவர் காசு கொடுத்தார் என்பதற்காக போகவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான் அவரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றோம். எங்களுக்கு பாதுகாப்பான பயணம் ஏற்பாடு செய்திருந்தனர், தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் அவர் ஏற்படுத்தி தந்தார்” என்றார்.

இதுதொடர்பாக ஆனந்த ஜோதியின் தந்தை கூறுகையில், “விஜய் மிகவும் உடல் மெலிந்து மனக்கவலையில் இருந்தார். அதனை பார்க்கும்போதே தங்களது கஷ்டமாக இருந்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர் அழைத்ததின் பேரில் நேரில் சந்தித்தோம். நடந்த துயர சம்பவத்திற்கு அவர் கண்ணீர் மல்க மன்னிப்பு கூறினார். உங்கள் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள் செய்து தருவதாகவும் கூறினார். கோடி கோடியாக பணத்தை கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா?” என அவர் கண்ணீர் மல்க கூறினார்.