தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகவேல்நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (56), விவசாயி. கடந்த 26ஆம் தேதி, விவசாய பணிக்காக தனது சொந்த நிலம் உள்ள விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் சென்றிருந்தார். வீடு பூட்டிய நிலையில் இருந்தது.
அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை திறந்து அதிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரையும் கடத்திச் சென்றனர்.

அடுத்த நாள் காலை நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் வீடு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனே சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, 5.5 சவரன் நகை, ரூ.1.65 லட்சம் பணம் மற்றும் கார் காணாமல் போனது தெரியவந்தது.புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
டி.எஸ்.பி. அசோகன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். கைரேகை நிபுணர்கள் சாட்சியங்களை சேகரித்தனர்.மேலும், சம்பவ நேரம் 26ம் தேதி இரவு 11.30 மணிக்கு மர்ம நபர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் கோவில்பட்டி–தூத்துக்குடி மெயின் ரோட்டில் காரில் புறப்பட்டு சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.