இன்று கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தாவது, "தி.மு.க.வினருக்கு ‘சார்’ என்ற பெயரே அலர்ஜியாகிவிட்டது. சாரின் வருகையால் அவர்களுக்கு தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தி.மு.க.வினர் நடுக்கத்தில் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் காலத்திலிருந்தே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற திருத்தப் பணிகள் நடைமுறையில் இருந்து வருகிறது. பீகாரில் மட்டும் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 28 லட்சம் பேர் இறந்தவர்கள், மீதமுள்ளவர்கள் குடிபெயர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் தி.மு.க.வினர் பயத்தில் உள்ளனர். பொய்யான வாக்காளர்கள் நீக்கப்பட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பு குறையும் என்ற அச்சம் அவர்களிடம் நிலவுகிறது. அதனால் தான் அவர்கள் வாக்காளர் பட்டியல் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தமிழக அரசு அதிகாரிகள் தான் மேற்கொள்கிறார்கள். அப்படியிருக்க, தி.மு.க. ஏன் பயப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக்கழக நிதியுதவி குறித்து சிலர் விருப்பமின்றி பணத்தை திருப்பி அனுப்பி உள்ளனர். அது அவர்க்ளின் தனிப்பட்ட முடிவு எனவும் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார்.