 
             ஒரே பாரதம், உன்னத பாரதம்: தேசிய ஒற்றுமை தினத்தின் முழக்கம்! Dhinasari Tamil %name%
 ஒரே பாரதம், உன்னத பாரதம்: தேசிய ஒற்றுமை தினத்தின் முழக்கம்! Dhinasari Tamil %name%
 
 
  
 
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி அன்று, நாட்டின் உயரிய தலைவர்களில் ஒருவரான, இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலை கௌரவிக்கும் விதமாக அவருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறது. அவரது தொலைநோக்குப் பார்வை, துணிச்சல் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றல்தான், துண்டு துண்டாகக் கிடந்த ராஜ்ஜியங்கள் இணைந்து, ஒன்றுபட்ட ஒரே நாடாக நம் நாடு மாறியது. எனவே தான், அவரது பிறந்த நாளான இந்நாளில், ஏக்தா திவஸ் அதாவது தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இது, வல்லபபாய் படேலின் தலைமைத்துவத்துக்கு மட்டுமல்ல, இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரே நாடு, என்றும் பிரிக்க முடியாதது என்ற நீடித்த யோசனையை நிலைநிறுத்துகிறது.
ஒரு தேசத்தை உருவாக்கிய மாமனிதர்:1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மிகப் பெரும் சவாலுடன் தான் சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டியிருந்தது. ஆங்கிலேயர்கள் 560 க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை விட்டுச் சென்றனர். ஒவ்வொன்றும் அதன் சொந்த ஆட்சியாளர்களையும் அவர்களுக்கே உரிய விருப்பங்களையும் கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலையில், ஒன்றுபட்ட இந்தியா எனும் கனவு, எளிதில் குழப்பத்திலும் பிரிவினையிலும் சரிந்திருக்கக்கூடும்!
  
 
அந்த இக்கட்டான தருணத்தில், சர்தார் வல்லபபாய் படேல் தேசிய ஒருங்கிணைப்பின் சிற்பியாகத் திகழ்ந்தார். உறுதிப்பாட்டுடன் கூடிய ராஜதந்திரத்தின் கலவையாக, பெரும்பாலான சுதேச ஆட்சியாளர்களை இந்தியாவுடன் இணையும்படி அவர் வற்புறுத்தினார். அதே நேரத்தில் எதிர்த்தவர்களுடன் தீர்க்கமாகவும் நடந்து கொண்டார். ஹைதராபாத், ஜூனாகத் மற்றும் பிற முரண்டுபிடித்த பகுதிகளை இணைப்பதில் அவர் கையாண்ட விதம், அவரை இரும்பு மனிதராக வெளிப்படுத்தியது. கட்டுப்பாடு, ராஜதந்திரம், இரும்பைப் போன்ற மன உறுதி ஆகியவற்றின் கலவையை அது வெளிச்சமிட்டுக் காட்டியது.
படேலின் வெற்றி, வெறும் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல; அது தொலைநோக்குப் பார்வை கொண்டது. இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அரசியல் ஒற்றுமை இருக்கும் என்று அவர் நம்பினார். அவரது தலைமை இல்லாமல், இன்று நாம் காணும் இந்தியா – காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை – ஒருபோதும் ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றிருக்காதுதான்!
தேசிய ஒற்றுமை தினத்துக்குப் பின் உள்ள அர்த்தம்!  
 
தேசிய ஒற்றுமை தினம் என்பது நாட்காட்டியில் வெறும் ஒரு தேதி மட்டுமல்ல, இது ஒரு தேசமாக நம்மைப் பிணைக்கும் மதிப்புகளை நினைவுறுத்துகிறது. நமது பலம் நமது ஒற்றுமையில்தான் உள்ளது, நமது பிரிவுகளில் அல்ல என்பதை ஒவ்வோர் இந்தியரையும் நினைவில் கொள்ளுமாறு இந்த தினம் வலியுறுத்துகிறது. பள்ளிகள், நிறுவனங்கள், அலுவலகங்களில் – ஒற்றுமைக்கான ஓட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் – இந்தியா எனும் நாடுதான் முதலில்; என்றும் எப்போதும்! – எனும் படேல் நிலைநாட்டிய கொள்கையின் அடையாளமாக மீண்டும் உறுதிப்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் பொருள்!
ஆனால் விழாவுக்கு அப்பால் பார்க்கும்போது, இந்த ஒற்றுமை தினத்தின் சாராம்சம், அதன் பிரதிபலிப்பில் உள்ளது. நம்முடையதைப் போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் – அதன் பல மொழிகள், மதங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் – ஒற்றுமை என்பது ஒரு சீரான தன்மையைக் குறிக்காதுதான்! வேறுபாடுகள் பல இருந்தபோதும், ஒன்றாக நிற்கவும், அந்த ப்பன்முகத்தன்மையில் நமது மிகப்பெரிய பலத்தைக் காணவும் விரும்புகிறோம் என்பதே இதன் பொருள்!
மாறிவரும் இந்தியாவில் பொருத்தம்  
 
சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியும், ஒற்றுமை தினத்தின் செய்தி எப்போதும் போலவே பொருத்தமானதாக உணரப்படுகிறது. இன்று இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் 1947 இல் எதிர்கொண்ட சவால்களிலிருந்து வேறுபட்டவைதான். இருந்தாலும் அவை, சிக்கலான தன்மைகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஒரே கருப்பொருளை எதிரொலிக்கின்றன.
பிராந்தியவாதம், வகுப்புவாத பிளவுகள், அரசியல் ரீதியாக பிளவுபடுத்தும் தன்மை ஆகியவை நமது கூட்டுறவு உணர்வைத் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாக்குகின்றன. ஆனால் “ஒரே பாரதம், உன்னத பாரதம்”, ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற கருத்து, வழிகாட்டும் ஒளியாக உள்ளது. இந்தியாவின் மகத்துவம் வெறும் ஒற்றுமையில் இல்லை, மாறாக பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர மரியாதை மூலம் எண்ணற்ற வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் திறனில் உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உயரமாக நிற்கும் ஒற்றுமை சிலை, வெறும் ஒரு நினைவுச்சின்னம் என்பதை விட அதிகம்! கல்லில் வடிக்கப்பட்ட அந்தச் செய்தி – ஒரு மனிதனின் உறுதிப்பாடு ஒரு நாட்டின் விதியை வடிவமைக்க முடியும் என்பது. மேலும், இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது ஒரு பரிசல்ல, மாறாக தொலைநோக்கு மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் வென்ற சாதனை எனும் வல்லபபாய் படேலின் நம்பிக்கையின் தினசரி நினைவூட்டலாக இந்தச் சிலை நின்று கொண்டிருக்கிறது.
படேலின் வாழும் மரபு  
 
படேலின் மரபு, வெறும் நம் வரலாற்றின் பக்கங்களுக்குள் மட்டுமே நின்றுவிட முடியாது. அது இந்தியாவின் கட்டமைப்பிலேயே வாழ்கிறது! அதன் குடிமைப் பணிகள், அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பு மற்றும் அதன் தேசியத் தன்மை ஆகியவற்றிலான. ஒழுக்கம், கடமை, தேசிய நலன் மீதான அவரது முக்கியத்துவம் போன்றவை, பொதுவாழ்வைத் தொடர்ந்து வழிநடத்துகிறது.
“ஒத்திசைந்து முறையாக ஒன்றுபட்டால் ஒழிய, ஒற்றுமைப்படாத மனிதவளம் பலம் அற்றது” என்று அவர் ஒருமுறை கூறினார். விரைவான முன்னேற்றமும் தொழில்நுட்ப மாற்றமும் இன்னும் பொதுவான நோக்கத்தில் வேரூன்ற வேண்டிய நமது காலத்திற்கு, அவரது வார்த்தைகள் ஒரு கண்ணாடி! ஒற்றுமை என்பது, படேலுக்கு வெறும் ஒரு சுருக்கமான கருத்தோட்டம் அல்ல, அது ஒரு வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் உயிர்நாடி.
ஒரே பாரதம், உன்னத பாரதம்ஒற்றுமை தினத்தைக் கொண்டாடுவது என்பது சாதி, மதம், மொழி அல்லது பிராந்தியம் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டிய, தேசியத்தின் கருத்தைக் கொண்டாடுவதாகும். குறுகிய விசுவாசங்களைத் தாண்டி உயர்ந்து இந்தியாவின் பெரிய இலட்சியத்திற்கு உறுதியளிக்க ஒவ்வொரு குடிமகனையும் இது அழைக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை நாம் குறிக்கும் போது, ஒற்றுமை என்ற இந்த உணர்வு மேலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்! நாம் ஒருவரை ஒருவர் எவ்வாறு நடத்துகிறோம், பன்முகத்தன்மையை எவ்வாறு மதிக்கிறோம், தேசத்தை சுயநலன் கடந்து எவ்வாறு வைக்கிறோம் என்பதில். இது பொறுப்புணர்வுள்ள நித்தியப்படியான செயல் ஆகிறது!
சர்தார் வல்லப பாய் படேல், கலாசார மரபு ரீதியில் ஒன்றுபட்டிருந்த பாரதத்தை, அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட ஒரு நாடாக நமக்கு அளித்தார். அதை வலுவானதாவும், துடிப்புள்ளதாகவும் வைத்திருக்கும் பணி நம்மிடம் உள்ளது. ஒன்றுபட்ட இந்தியா மட்டுமே, உண்மையிலேயே ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க முடியும் என்பதே ஒற்றூமை தினத்தின் உணர்வு! ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்பதை இந்த உணர்வு நமக்கு நினைவூட்டும்!
ஒரே பாரதம், உன்னத பாரதம்: தேசிய ஒற்றுமை தினத்தின் முழக்கம்! News First Appeared in Dhinasari Tamil