பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. பெண்கள் சுயமாக முன்னேறும் வகையில் கடன் உதவி, மானிய உதவி, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுழற்சி நிதி, குறைந்த வட்டியில் தொழில் தொடங்க கடன் உதவி போன்ற பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதாவது – சமூக நலத்துறையின் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதிகள்: ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும், வயது 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும், மேலும் குறைந்தது மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தையல் பயிற்சி முடித்திருக்க வேண்டும். தேவையான சான்றுகள், புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கூடுதல் தகவல்களுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகள், கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த இயந்திரங்கள் வழங்கப்படும். இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துடன் அல்லது 044-22350780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.